பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் தேரோட்டம்

தருமபுரி அருகே அன்னசாகரத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே அன்னசாகரத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்னசாகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த மார்ச் 14-ஆம் தேதி புற்றுமண் எடுத்தல், 15-ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 16-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நரி, பூத, நாக வாகன உத்ஸவம் நடைபெற்றது. மார்ச் 19-ஆம் தேதி காலை பால்குட ஊர்வலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அன்றைய தினம் இரவு வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரின் திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 21-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், வள்ளி, தெய்வானையருடன் சிவசுப்பிரமணியரின் வீதி உலா நடைபெற்றது. இதில், அன்னசாகரம் மற்றும் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை ஸ்ரீ முருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு முருகன், வள்ளி-தெய்வானை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, செங்குந்தர் பூந்தோட்டத்தில் இருந்து தேர் திருவீதி உலா நடைபெற்றது. தேர் மீது பக்தர்கள் மஞ்சள், மிளகு, முத்துக்கொட்டை, தானியங்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் பக்தர் மார்பு மீது உருளை வைத்து மஞ்சள் இடித்து பக்தர்களுக்கு வழங்கினர். மாலை 6 மணியளவில் வசந்த திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காசி விசுவநாதர், லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் முருகப் பெருமான் காவடி திருத்தேர் திருவிழா நடைபெற்றது. காலை 6 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காசி விசுவநாதர் உடனுறை விசாலாட்சி ஆலயத்தில் காவடி பம்பை சிலம்பாட்டத்துடன் திருத்தேர் திரு வீதி உலா நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com