திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் கொண்டுவரவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர், நல்லம்பள்ளி, தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதல்வர் பேசியது:  மத்தியிலும், மாநிலத்திலும் 15 ஆண்டு காலம் திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.  அவர்கள் ஆட்சியிலிருந்த போது தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை.  மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை.  தங்கள் குடும்ப நபர்கள் மீது மட்டுமே மிகுந்த அக்கறையை செலுத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.  அப்போதெல்லாம் கிராமங்களுக்குச் செல்லாமல், தற்போது ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்துகிறார்.  அதிகாரத்தில் இருக்கும்போது மக்களை மறந்துவிட்டார்.  திமுகவினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. அவர்கள் ஆட்சியில் இல்லை. அவர்களால் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாது.
தமிழக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்,  மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 37 லட்சம் மாணவ,  மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியில்  தமிழக அரசு புரட்சி செய்து வருகிறது.  இதனால் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.  இதேபோல, நீர் மேலாண் திட்டங்களைச் செயல்படுத்தி, தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 2,400 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயத்தை காக்கும் இத்தகைய நடவடிக்கையை பாராட்டி மத்திய அரசின் விருதை தொடர்ந்து தமிழக அரசு பெற்று வருகிறது.
பொங்கல் திருநாளுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000  வழங்கப்பட்டது.  இதனை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று திருநாளைக் கொண்டாடினர்.  அடுத்து ஏழை, எளிய  மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் மூன்று  தவணைகளாக வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. இவ்விரு திட்டங்களும் தற்போது தேர்தலுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
நாகரிகம்  தெரியாதவர்: பாமக நிறுவனர் ராமதாஸையும், என்னையும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார் திமுக  தலைவர் ஸ்டாலின். ராமதாஸின் வயது, அவரது பொது வாழ்க்கை, அவரது மக்கள் சேவை என எதையும் அறியாமல் அவர் பேசுகிறார்.  ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது அவருக்கு  தெரியாது. அவருக்கு நாவடக்கம் தேவை.  இத்தகைய ஆணவத்தை அடக்கக் கூடியது இந்த தேர்தல்.
கொடநாடு  கொலை வழக்கில் நான் 5 கொலை செய்ததாகவும் அவர் பேசியுள்ளார்.  கொடநாடு வழக்கில் தொடர்புடைவர்கள் கூலிப் படையினர். அவர்கள் மீது கேரளத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.  இந்த  வழக்கை கண்டுபிடித்தது எங்களது அரசு. உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை  பெற்றுத் தரப்படும். ஆனால், கூலிப் படையினருக்கு ஜாமீன் கோருவதும், அக் கும்பலுக்கு துணை போவதும் திமுகவினர். 
சிப்காட் தொழில்பேட்டை தொடங்கப்படும்: தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நல்லம்பள்ளி அருகே 1,783 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும்.  இதற்காக 1,283 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. மீதமுள்ள 550 ஏக்கர் நிலம் விரைவில் கையகப்படுத்தப்பட்டு,  அங்கு தொழில்சாலைகள் தொடங்கப்படும்.
இதன் மூலம், தருமபுரி பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரம் மேம்படும். மேட்டூர் அணை நீரை தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்துக்கு வழங்கும் திட்டம், காவிரி மிகை நீரை ஏரிகளுக்கு  கொண்டு வரும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும்.  அரூர் பகுதியில் 2 வழிச்சாலை நான்கு வழிச்சாலையாகவும், ஏ.பள்ளிப்பட்டி முதல் அயோத்தியாப்பட்டணம் வரையிலான 36 கி.மீ. வரையிலான சாலை சீரமைக்கப்படும்.  ஊத்தங்கரை முதல் வாணியம்பாடி வரை இருவழிச் சாலை ரூ.205  கோடியில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்.  அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் 5 நீர்ப்பாசனத் திட்டங்கள் ரூ.520 கோடியில் நிறைவேற்ற மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, மத்தியில்  நிலையான பிரதமரைத் தேர்வு செய்ய எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.
மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இடங்களிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குச்
சேகரிப்பில் ஈடுபட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com