தேசிய தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் ரூ.17 கோடி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த
தேசிய தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் ரூ.17 கோடி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மானியத்துடன் ரூ. 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தோட்டக்கலை துறை சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களில் வீரிய ஒட்டுரக காய்கறிகள், மா, கொய்யா, திசுவாழை, மல்லிகை, இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் கிராம்பு ஆகியவற்றில் புதிய தோட்டங்கள் அமைக்க ரூ.7,99,82,000 செலவில் 415 ஹெக்டேர் பரப்பில் 40 சத மானியமும், பப்பாளி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பயிர்களுக்கு 50 சத மானியமும் வழங்கப்படுகிறது.
 மேலும், உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை உள்ளடங்கிய பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்திற்கு ரூ. 10, 98,62,000 செலவில் 2.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலை குடிகள் அமைக்கவும், 50 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்போர்வை அமைக்க 50 சத மானியத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 பண்ணை இயந்திரங்களான மினி டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் தெளிப்பான்கள் 25 முதல் 50 சத மானியம் வரை அனுமதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சத மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.
 தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மானியத்துடன் கூடிய ஊரக சந்தை, சில்லறை விற்பனை நிலையம் மற்றும் நடமாடும் விற்பனை நிலையம் அமைக்க விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக ரூ. 22 .75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 பண்ணை சாகுபடிக்கு தேவையான பொருள்கள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்திற்கும் மிகாமல் ரூ. 32.32 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1,600 விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.8.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 சத மானியத்தில் தேனீ வளர்ப்பு, 50 சத மானியத்தில் பழைய தோட்டங்கள் புனரமைத்தல், மண்புழு உரம் உற்பத்தி மற்றும் மண்புழு உர படுக்கை அமைப்பதற்கு ரூ. 3.30 லட்சமும், தோட்டக்கலை பயிர்களுக்காக 30 சத மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 500-க்கும் மிகாமல் நுண்ணூட்ட கலவை விநியோகம் செய்ய ரூ.1.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களுக்காக ரூ.17 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கபபட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com