சூளகிரி அருகே 3-ஆவது சிப்காட்: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

சூளகிரி அருகே தொடங்கப்படவுள்ள 3-ஆவது சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டலம், டெல்டா சிப்காட்டில் 1 லட்சம் பேருக்கு

சூளகிரி அருகே தொடங்கப்படவுள்ள 3-ஆவது சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டலம், டெல்டா சிப்காட்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஒசூரில் தெரிவித்தார்.  
ஒசூரில் 65-ஆவது கூட்டுறவு வார விழாவை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வியாழக்கிழமை தொடக்கி வைத்து, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 479  பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரத்தில் விவசாயக் கடன் மற்றும் தொழில்முனைவோருக்கான கடனுதவிகளை வழங்கினார். 
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபாகரன் வரவேற்றார்.
இதில் அமைச்சர் பேசியது: வேளாண் துறையில் ரூ.1 கோடியே 10 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து கடந்த 4 நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் விருதைப் பெற்று வருகிறோம் . 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 120 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் நடப்பாண்டில் 9,260 விவசாயிகளுக்கு ரூ.57 கோடியே 26 லட்சம் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,878 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.10 கோடியே 46 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மத்திய வங்கியின் மூலமாக 1,267 உறுப்பினர்களுக்கு ரூ.7 கோடியே 7 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட், தேன்கனிக்கோட்டை சூளகிரி இடையே சிறப்பு பொருளாதார மண்டலம், டெல்டா சிப்காட் ஆகியவை மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஒசூர் அருகே விமான நிலையம் தொடங்கப்பட உள்ளது. தட்கல் முறையில் 2,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை விவசாயிகள் பயன் பெறும் வகையில், கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்தி தங்களில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் ரவிச்சந்திரன், சரவணன், ராதாகிருஷ்ணன், நாராயணன், திருமாவளவன், ராமச்சந்திரன் (பால்வளம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com