ஒசூர் தம்பதியை சித்ரவதை செய்து கொலை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒசூரைச் சேர்ந்த தம்பதியை சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்திருப்பது

கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒசூரைச் சேர்ந்த தம்பதியை சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒசூர் சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் நந்தீஸ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த சுவாதியை (20) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட  நந்தீஸ்- சுவாதியின் உடல் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா, வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சுவாதியின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய மூவரையும் ஒசூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, நந்தீஸ்- சுவாதியின் உடல்கள் மாண்டியா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், நந்தீஸ்-சுவாதியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், பெலகவாடி போலீஸார் கூறியது:
ஒசூரில் வசித்து வந்த தம்பதியை நவ.10-ஆம் தேதி இரவு பார்த்த சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா, வெங்கடேஷ், கார் ஓட்டுநர் சாமிநாதன் உள்ளிட்டோர் காரில் அங்குச் சென்றனர். 
இருவரையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வீட்டிற்கு வாருங்கள் என்று கூறினர். அதை நம்பி அவர்கள் காரில் சென்றனர். அந்த கார் சூடுகொண்டப்பள்ளி சாலைக்கு செல்லாமல் கர்நாடக மாநிலம், கணகபுராவுக்கு செல்லும் சாலையில் சென்றது.
அப்போது,  சுவாதியை விட்டு பிரிந்து செல்லுமாறு நந்தீஸை மிரட்டினர்.அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 2 பேரின் தலை உள்பட பல இடங்களை வெட்டினர். அவர்களின் முகங்களை தீயிட்டு எரித்தனர். பின்னர், சுவாதிக்கு மொட்டை அடித்து அவரது வயிற்று பகுதியை சிதைத்து ஆற்றில் வீசியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இக் கொலையில் நந்தீஸ் அம்பேத்கர் படத்துடன் கூடிய சட்டை அணிந்திருந்தார். அதில் டாக்டர் அம்பேத்கர், ஜெய்பீம் சூடுகொண்டப்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்தே நாங்கள் கொலையானவர் தமிழக மாநில எல்லையான ஒசூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகத்தில் தகவல் அளித்தோம். தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என கர்நாடக மாநில போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com