உத்தனப்பள்ளி அருகே யானைகள் அட்டகாசம்: தக்காளி, முட்டைகோஸ் செடிகள் நாசம்

உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப் பகுதிக்குள் புகுந்து 40 காட்டு யானைகள் வனத்தையொட்டியுள்ள

உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப் பகுதிக்குள் புகுந்து 40 காட்டு யானைகள் வனத்தையொட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளன.
தற்போது அங்கு வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்துக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ளது சானமாவு காப்புகாடு. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவிலிருந்து சானமாவு காட்டுக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் வந்து விவசாயப் பயிர்களை சேதம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
நிகழ் ஆண்டும் உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டுக்கு 40 யானைகள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வந்தன. இந்த யானைகளை வனத் துறையினர் போராடி தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டினர். அந்த யானைகள் மீண்டும் மாரசந்திரம், வட்டவடிவுப் பாறை, ஊடேதுர்க்கம், சினிகிரிப்பள்ளி காடுகள் வழியாக சானமாவு காட்டுக்கு திங்கள்கிழமை மீண்டும் வந்தன.
முன்னதாக இந்த யானைகள் உத்தனப்பள்ளி அருகே அஞ்சலகிரியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றன. அங்கு ராகி, நெல், தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்தன. தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் இரவு நேரங்களில் சானமாவு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்யலாம் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
யானைக் கூட்டத்தை தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி மீண்டும் கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல போடூர் பகுதியில் சுற்றிய ஒற்றை யானை திங்கள்கிழமை விவசாயி கிருஷ்ணப்பா என்பவரை தாக்கியது. அந்த யானை தற்போது போடூர் பகுதியில் சுற்றுவதால் இரவு நேரத்தில் விவசாயிகள் அங்கு நடமாட வேண்டாம் என வனத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com