கரும்பு விவசாயி மீது தாக்குதல்: இருபிரிவினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

மத்தூரில் கரும்பு விவசாயியைத் தாக்கிய தகராறில் இரு பிரிவினரிடையே போச்சம்பள்ளி வட்டாட்சியர்

மத்தூரில் கரும்பு விவசாயியைத் தாக்கிய தகராறில் இரு பிரிவினரிடையே போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிக் குழு பேச்சுவார்த்தையில் சுமூகமான சூழல் ஏற்பட்டது.
போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள மூக்காகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ்  மகன் சக்திவேல் (31). இவரது கரும்புத் தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர் கரும்பு உடைத்து சாப்பிட்டதாகக் கூறி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரின் தந்தை ஜெயவேல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து  சக்திவேலுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து மத்தூர் போலீஸார் விசாரித்து வந்தனர். 
இந்தச் சம்பவத்தை அடுத்து மத்தூர் பகுதியில் சனிக்கிழமை சக்திவேல் தரப்பைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஞாயிற்றுகிழமை இரவு மத்தூர் பேருந்து நிலையத்தில் திடீரென கூடிய பொதுமக்கள் பேருந்து கூரைகளை சேதப்படுத்தியும், காவல்துறை பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படை போலீஸார் குவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இருபிரிவினரிடையே திங்கள்கிழமை மதியம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்,  ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத்,  துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் விஜயன் ஆகியோரது முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இனிவரும் காலங்களில் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும், மீறினால் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாகவும் கூறி சென்றனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், 50- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com