தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத் தேர்தல்

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா,  கிருஷ்ணகிரியில் உள்ள கலைஞர் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் தலைமை வகித்தார். 
திமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
அண்ணா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது நாள்தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.  ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால்தான், அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது.   திமுக ஆட்சிக்கு வந்தவுடனே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும். குற்றவாளிகள் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவார்கள். இதை கேட்கும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 
அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.  பல ஊழல்களில் சிக்கியுள்ள அதிமுக அரசை மிரட்டி, பாஜக கூட்டணி வைத்துள்ளது.  யாருடன் யார் கூட்டணி வைத்தாலும்,  தமிழ்நாட்டில் பாஜக காலுன்ற இயலாது.  நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.  திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்த வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக  கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது,  எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏ-க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  விரைவில் இதற்கான தீர்ப்பு வர இருக்கிறது.  இதனால், இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பு இருக்காது. 
தற்போது, மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல,  தமிழக சட்டப்பேரவைக்கும் பொதுத் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது என்றார். 
எம்எல்ஏ-க்கள் எ.வ.வேலு, ஓய்.பிரகாஷ்,  பி.முருகன், தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com