தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே வேடப்பட்டியில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேடப்பட்டி கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணை

ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேடப்பட்டி கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த ஆற்றுப் பகுதியில் கூட்டாத்து என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாகும்.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த வழியாகச் சென்று சாத்துனூர் அணை பகுதிக்குச் சென்று பிறகு வீணாகக் கடலில் கலக்கிறது.
இந்த வேடப்பட்டி கூட்டாத்தில் ஒரு தடுப்பணை கட்டினால் சுமார் 6,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த ஆற்றின் தண்ணீரை நம்பியே பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், நெல், கரும்பு, வாழை, பருத்தி போன்றவைகள் சாகுபடி செய்கின்றனர்.
இந்தப் பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்தால் அருகே உள்ள கிராமங்கள் பயன்பெறும் வேடப்பட்டி, சந்திரப்பட்டி, மண்ணாடிப்பட்டி, கோணப்பட்டி, கிட்டம்பட்டி, ஊமை கவுண்டம்பட்டி, பெருமாள்நாய்க்கன்பட்டி, காட்டு சிங்கிரீபட்டி, புதூர் புங்கனை, மூங்கிலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். மேலும் இப் பகுதிகளில் குடிநீர் பஞ்சமும் ஏற்படாமல் தடுக்கலாம்.
இதுகுறித்து விவசாயி நாகராஜ் கூறியது:
தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயர்வதன் மூலம் பாசனம் வசதி ஏற்படும். வன விலங்குகளின் தொல்லையும் இருக்காது.  வேடப்பட்டி கூட்டாத்து பகுதியில் தடுப்பணை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணை வேண்டி தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப் பணித் துறை அதிகாரியிடமும் அனைத்து பகுதி விவசாயிகள் சார்பில் மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகளைக் காக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com