கிருஷ்ணகிரி

ஒசூர் தொகுதியில் முதன்முறையாக திமுக-அதிமுக நேரடி போட்டி

DIN

தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும், முதன்முறையாக ஒசூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. ஒசூர் தொகுதி வரலாற்றில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதும் முதன் முறையாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒசூர் ஒன்றாகும். இந்த தொகுதி கடந்த 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 73 ஊராட்சிகள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பண்ணை ஒசூர் மத்திகிரியில் அமைந்துள்ளது. ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார் என்பது ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சிறப்பாகும். அவர் பிறந்த வீடு அரசால் நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பன்மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர். ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள தொகுதி என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து குடியேறிய வாக்காளர்கள் 30 சதவீதம் பேர் உள்ளனர். 
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த தொகுதியில் ஒசூர் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் ஒசூர் தொகுதி மாவட்டத்திலேயே மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதியாக விளங்கியது. ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டில் தொகுதி சீரமைப்பில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் சேர்க்கப்பட்டதால், ஒசூர் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இருந்த போதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஒசூர் விளங்குகிறது. 
இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திராவிடக் கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரையில் ரெட்டி, கெளடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும், முஸ்லிம் சமுதாய மக்களும் அதிகளவில் உள்ளனர். இதைத் தவிர வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். குறிப்பாக கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொகுதியில் உள்ளனர். இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் இந்த தொகுதியில் குடியிருக்கக் கூடிய வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் ஓட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
ஆளுங்கட்சிகளாக அதிமுக, திமுக மாறி மாறி வந்த போதிலும், ஒசூர் தொகுதியில் தேசிய கட்சிகளை தான் தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுத்து வந்தனர். முதன்முறையாக ஒசூர் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களத்தில் போட்டியிடுகின்றன. 

இதுவரை வென்றவர்கள்

    1952    முனிரெட்டி (சுயே) 
    1957    அப்பாவு பிள்ளை (சுயே)
    1962    ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்)
    1967    வெங்கடசாமி (சுதந்திரா கட்சி) 
    1971    வெங்கடசாமி (சுதந்திரா கட்சி) 
    1977    என்.ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்) 
    1980    வெங்கட்ட ரெட்டி (காங்கிரஸ்) 
    1984    வெங்கட்ட ரெட்டி (காங்கிரஸ்) 
    1989    ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்) 
    1991    கே.ஏ.மனோகரன் (காங்கிரஸ்)
    1996    வெங்கடசாமி (ஜனதா தளம்) 
    2001    கே.கோபிநாத் (காங்கிரஸ்) 
    2006    கே.கோபிநாத் (காங்கிரஸ்) 
    2011    கே.கோபிநாத்(காங்கிரஸ்)
    2016    பாலகிருஷ்ணா ரெட்டி(அதிமுக)

தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் விமல்ராஜ் - 9445000430
உதவி தேர்தல் அலுவலர் பாலசுந்தரம் - 9445000541

வாக்காளர்கள்
    ஆண்    1,66,064
    பெண்    1,56,759 
    திருநங்கைகள்    ...........96
    மொத்தம்    3,22,919
    மொத்த வாக்குச் சாவடி - 364
    ஒசூர் தொகுதி எண் - 55

2016 தேர்தல் முடிவுகள்
    பாலகிருஷ்ணா ரெட்டி (அதிமுக)    89510
    கே.கோபிநாத் (காங்கிரஸ்)    66,546
    பாலகிருஷ்ணன்( பாஜக)    28,850
    முனிராஜ் (பாமக)    10,309, 
    சந்திரன்(தேமுதிக)    7780


தேசியத்தில் இருந்து திராவிடத்தை நோக்கி வரும் ஒசூர்
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-இல்  அதிமுக அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டி வெற்றி பெற்றார். பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்ததால், அவர் எம்.எல்.ஏ. பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஒசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளராக முன்னாள் ஒசூர் நகர்மன்றத் தலைவரும், திமுக ஒசூர் நகர பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி எஸ்.ஜோதி
போட்டியிடுகிறார். 
முதன்முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா, நகர்மன்றத் தலைவராக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். இவர் 2011-இல் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளது. 
அதிமுக வேட்பாளரான எஸ். ஜோதி, கடந்த 2 ஆண்டுகளாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த கணவரின் துணையோடு களம் காண்கிறார். பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் இவருக்கு உள்ளது.  
மக்கள் எதிர்பார்ப்பு: உடான் திட்டத்தில் ஒசூரில் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை அமைத்து ரயில்சேவை தொடங்க வேண்டும். ஒசூரில் அதிகஅளவில் தொழில்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், வர்த்தக மையம் அமைக்க வேண்டும். ஒசூரில் அதிகளவில் குடிநீர் பிரச்சனை உள்ளது. 45 வார்டுகளில் 15 வார்டுகளில் மட்டுமே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வருகிறது. மற்ற 30 வார்டுகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும். 
ஒசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினால் ஒசூரில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் ஒசூரில் குடிநீர் பிரச்னை தீரும். ஒசூரில் வடக்கு பகுதியில் மேலும் ஒரு உள்வட்டச் சாலை அமைக்க வேண்டும். தொழிலாளர் தங்கும் வகையில் இளைஞர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

SCROLL FOR NEXT