ஒசூர் மாநகராட்சியில் கோடைக்கு முன்பே தொடங்கியது குடிநீர் பிரச்னை

ஒசூர் மாநகராட்சியில் கோடை தொடங்கும் முன்பே பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியுற்று வருகின்றனர்.

ஒசூர் மாநகராட்சியில் கோடை தொடங்கும் முன்பே பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியுற்று வருகின்றனர்.
ஒசூர் நகராட்சியில் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது ஒசூர் ராமநாயக்கன் ஏரி. தற்போது இந்த ஏரி வற்றிவிட்டதால், ஒசூர் நகர் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர்
வற்றிவிட்டது.
ஒசூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை ஒசூர் நகராட்சி நிர்வாகம்  வழங்கி வருகிறது. அதுவும் 15 நாள்கள் முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒசூர் ஜேஜே நகர், வசந்த் நகர், ரெயின்போ கார்டன், ராயக்கோட்டை அட்கோ, முனீஸ்வர் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மாதமாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை குறைந்துவிட்டதால், குடிநீர் பிரச்னை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
எனவே,  நிரந்தரத் தீர்வாக ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 
இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் துரை செய்தியாளர்களிடம் கூறியது: கோடை தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்னை தொடங்கிவிட்டது. ஒசூர் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தியதால் வீட்டு வரியை 50 சதவீதமும், குடிநீர் வரியை 300 மடங்கு வரையும் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு.பிரபாகர், ஒசூர் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com