கஜா புயலால் 21,000 மின் கம்பங்கள் சேதம்

கஜா புயல் காரணமாக,  21 ஆயிரம் மின் கம்பங்கள், 2 மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.  

கஜா புயல் காரணமாக,  21 ஆயிரம் மின் கம்பங்கள், 2 மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.  இவற்றை சீரமைக்கும் பணியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார் மின்சாரம், மதுவிலக்கு,  ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி. 
 நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திருசெங்கோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-
 கஜா புயல் காரணமாக,  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த மாவட்டங்களில்  மொத்தம் 21,000 மின் கம்பங்கள்,  2 மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன என முதல் கட்டமாகத் தெரியவந்துள்ளது. 
 மாவட்டங்களின் உள்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  முழுமையான விவரம் இனிமேல் தான் தெரியவரும்.  மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகளில் மின்வாரியப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 
மின் வாரியம் சார்பில் முதலில் மருத்துவமனைகள்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடிநீர் நீரேற்றும் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் உடனடியாக மின் இணைப்பு கொடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 
    தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி,  மின் விநியோகம் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மின் வாரியத் தலைவர்,  உயரதிகாரிகள் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு, பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளோம். 
 மேலும்,  தேவையான எண்ணிக்கையில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளன.  முகாம்களில் ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.  மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் உள்ளதால், அச்சப்படத் தேவையில்லை. உள் மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதால், அங்கும் மின்வாரியம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்றார். 
பேட்டியின்போது  சமூக நலம்,  சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா உள்ளிட்டோர் உடனிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com