நாமக்கல்

மலைக்கோட்டையைச் சுற்றி பதாகைகள் வைக்கத் தடை: நகராட்சி மீண்டும் அறிவிப்பு

தினமணி

நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி விளம்பர பதாகைகள் வைக்க மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான முடிவை இப்போது செயல்படுத்த முன்வந்தாலும், நகராட்சி நிர்வாகத்தின் முடிவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
 நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் அழகிய நாமக்கல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையர்(பொறுப்பு) கமலநாதன், டி.எஸ்.பி. ராஜேந்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் எம்எல்ஏவான பிறகு கடந்த 7 ஆண்டுகளில் நாமக்கல் நகரம் அழகு பெற்றுள்ளது என்பதை இந்த நகரத்தை சேர்ந்த அனைவரும் அறிவர். உழவர் சந்தை எதிரில் உள்ள சாக்கடைக் கழிவுகள் தேங்கி நின்ற இடம் செலம்ப கவுண்டர் பெயரில் அழகிய பூங்காவாக, நாமக்கல்லின் அடையாளமாக மாறியுள்ளது. இதுபோல் மலைக்கோட்டை அடிவாரத்தில் 3 குளங்கள் சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 இந்த நகரின் அழகைச் சீர்குலைக்கும் வகையில், நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி விளம்பர, வாழ்த்துப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என கடந்த 2016ஆம் ஆண்டில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 ஆனால், தீர்மானத்தை கடைப்பிடிக்காமல் தற்போது வரை விளம்பரப் பதாகைகள் வைப்பது, சுவரொட்டி ஒட்டுவது தொடர்கிறது. இது நாமக்கல் நகரத்தின் அழகைச் சீர்குலைக்கிறது.
 எனவே, தற்போதைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இனி நாமக்கல் மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் சுவர்களில் பதாகைகள் வைப்பவர்கள், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
 மேலும், பதாகைகள் பறிமுதல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் கடைகள் போலீஸார் மூலம் அப்புறப்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
 இந்தக் கூட்டத்தில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சேகர் மற்றும் விளம்பர பதாகை தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதையும் கொஞ்சம் கவனியுங்க...
 நகராட்சிப் பகுதியில் பதாகைகள் வைக்க, சுவரொட்டிகள் ஒட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பரமத்தி சாலையில் அண்ணா சிலை தொடங்கி, செலம்ப கவுண்டர் பூங்கா வரை அரசியல் கட்சிகள் பதாகைகள் வைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே குறுகலாக உள்ள இந்த சாலையில் பதாகைகளை வைத்து மறைத்துக் கொள்வதால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் இந்தச் சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
 இதுபோல், அண்ணா சிலை தொடங்கி நகராட்சி வணிக வளாகம் வரை பரமத்தி சாலையில் சாலையின் பாதி அளவான வெள்ளைக் குறியீடு வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் விபத்து ஏற்படாத நாள்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 நகரம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது அமல்படுத்த முடிவெடுத்துள்ள நகராட்சி நிர்வாகம், நகராட்சி அலுவலகம் எதிரிலேயே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் போக்குவரத்து இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கையெடுக்க வேண்டும். அழகிய நாமக்கல் என்ற முழக்கத்தோடு, விபத்தில்லா நாமக்கல் என்ற முழக்கத்தையும் நகராட்சி முன்வைக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT