அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: அதிமுக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது

அமைச்சர் பி.தங்கமணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பதிவு செய்ததைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகிக்கு

அமைச்சர் பி.தங்கமணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பதிவு செய்ததைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாமக்கல்லைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் பெண் எம்.எல்.ஏ.வை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
  நாமக்கல் முல்லை நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி(59).  இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு கபிலர்மலை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர்,  அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
 கடந்த சில நாள்களாக இவர் முகநூல்,  கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழக மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி குறித்து அவதூறாக கருத்துகளைப் பதிவு செய்து வந்துள்ளார்.  இதனைத் தட்டிக் கேட்க வீட்டுக்கு வருவதாக கூறிய கீரம்பூர் ஊராட்சியின் அ.தி.மு.க. கிளை கழகச் செயலாளர் ராஜா என்பவருக்கு சரஸ்வதி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 
 இதனையடுத்து,  ராஜா அளித்த புகாரின்பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த நாமக்கல் போலீஸார், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியை அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்து,  நாமக்கல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 
 இதன்பின்,  நாமக்கல் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 இல் ஆஜர்படுத்தினர்.   அங்கு நீதிபதி தமயந்தியிடம் தனக்கு  உடல் ரீதியாக  பிரச்னை இருப்பதால், சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும், தற்போது உடல்நிலை  சரியில்லை என சரஸ்வதி கூறியுள்ளார். 
 இதன்பின்,  சரஸ்வதியை நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.   சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்தனர். 
  இதனையடுத்து,  மீண்டும் நீதிபதி முன் சரஸ்வதியை ஆஜர்படுத்தினர்.  கைதான சரஸ்வதியை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சேலம் மகளிர் கிளைச் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com