சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

கடும் போக்குவரத்து நெரிசல்: கோட்டை சாலை வழியாக வாகனங்கள் இயக்குவதில் திட்டமிடல் அவசியம்

DIN | Published: 24th September 2018 08:31 AM

ஆஞ்சநேயர் கோயில், நரசிம்ம சுவாமி கோயில்களுக்கு வார இறுதி நாள்களில் பக்தர்கள் அதிகம் வருவதால் அந் நாள்களில் கோட்டை சாலை வழியாக பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல்லில் இருந்து சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், கார்கள், சரக்கு ஆட்டோக்கள் பூங்கா சாலை, கோட்டை சாலை வழியாகச் செல்லும்.
இது ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.
அங்கு பூங்கா, உழவர் சந்தை, ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில், கோட்டை அரசு துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
வார இறுதி நாள்கள், அமாவாசை உள்ளிட்ட இந்துகளின் விரத நாள்களில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆஞ்சநேயர், நரசிம்ம சுவாமி கோயில்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் சேலம் சாலை சந்திப்பிலிருந்து பரமத்தி சாலையில் உள்ள பூங்கா வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், இந்த 1 கி.மீ. தூரத்தைக் கடக்க வாகன ஓட்டிகள் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
இதனால் கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் நாள்களில் இந்தச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாசார ஆர்வலர் ஆர். பிரணவகுமார் தெரிவித்தது:
இதனால் முக்கியமான விரத நாள்கள், விடுமுறை நாள்களில் கோயில் பண்டிகை நாள்களில்  பேருந்துகள், கார்கள், சிறிய வகை சரக்கு ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் கோட்டை சாலை வழியாக இயக்க தடை விதிக்க வேண்டும். வாகனங்களை உழவர் சந்தையின் எதிரில் உள்ள கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 மேலும் கோட்டை சாலையில் நரசிம்மர் கோயிலில் இருந்து சாலையைக் கடந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சாலையின் மேல் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். கோயிலுக்கு வரும் அனைத்து வாகனங்களையும் வாகன நிறுத்துமிடமான நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த அறிவுறுத்த வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க போலீஸார் அல்லது கோயில் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும் இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இதன்மூலம் கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோயிலுக்குச் செல்ல முடியும் என்றார்.
 

More from the section

சவுளுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் உதவி
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புப் பயிற்சி
சிறப்பு வழக்குரைஞர் நியமனம்: கோகுல்ராஜ் தாயார் ஆட்சியரிடம் மனு
அசோலா வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்