தடையின்றி குடிநீர் கேட்டு பெண்கள் மனு

நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராம மக்கள் தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராம மக்கள் தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மு.ஆசியா மரியம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.
நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் வந்து மனு அளித்தனர். அவர்கள் மனுவில், எங்களது பகுதியில் 700-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். அன்றாடத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறோம். ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், குடிநீருக்காக தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது.
காதப்பள்ளி, அலையாகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தக் கோரி மனு: நாமக்கல் மாவட்ட ஆதி தமிழர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் டி.சுப்பிரமணி ஆட்சியரிடம் வழங்கிய மனு: இந்திய மக்களாட்சி முறையில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கலாம் என்பதனை வகுத்து தந்தவர் டாக்டர் அம்பேத்கர். வாக்களிக்கத் தகுதி உள்ள மக்கள், தங்களுடைய வாக்கை செலுத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு மின்னணு வாக்கு இயந்திரம் வேண்டாம். அதன்மீது சந்தேகம் உள்ளதால், பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com