கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

கோகுல்ராஜ் கொலை வழக்கில்,  பிறழ் சாட்சியம் அளித்த அவரது தோழி சுவாதியை கைது செய்ய நாமக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கில்,  பிறழ் சாட்சியம் அளித்த அவரது தோழி சுவாதியை கைது செய்ய நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23).  பொறியியல் பட்டதாரியான இவர்,  கடந்த 2015 ஜூன் 23-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.  மறுநாள் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.  திருச்செங்கோடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ்,  அவரது சகோதரர் தங்கதுரை,  கார் ஓட்டுநர் அருள் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  இதில் ஒருவர் இறந்து விட்டார்.  மேலும், ஒருவர் தலைமறைவாகி விட்டார்.
மீதமுள்ள 15 பேர் திருச்சி, கோவை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு போலீஸாரிடம் இருந்து இவ் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவத்தன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீஸார்,  கோகுல்ராஜின் தோழியான சுவாதியை முக்கிய சாட்சியாகப் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி சாட்சியம் அளிக்க சுவாதி அழைக்கப்பட்டார்.  நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சம்பவத்தன்று தான் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும், கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவர் என்ற அடிப்படையில் மட்டுமே தெரியும் என்றும்,  சிபிசிஐடி போலீஸார் அளித்த காட்சிப் பதிவுகளை கொண்டு தன்னால் யாரையும் அடையாளம் காட்ட இயலாது எனவும் பிறழ் சாட்சியம் அளித்தார்.
இதனிடையே,  பிறழ் சாட்சியம் அளித்த சுவாதியை,  மறு விசாரணைக்கு அழைக்கக் கோரி சிபிசிஐடி தரப்பில்,  நாமக்கல் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது.  அப்போது சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  அவர் தரப்பு வழக்குரைஞரும் உரிய பதில் அளிக்கவில்லை.  இதையடுத்து, வழக்கு 20-ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.  புதன்கிழமையும் விசாரணைக்கு சுவாதி ஆஜராகவில்லை.  அதைத் தொடர்ந்து,  நீதித் துறை நடுவர் வடிவேல்,  சுவாதியைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததுடன்,  மார்ச் 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
சாட்சியம் அளிப்பு 27-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹெச்.இளவழகன், கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.  மொத்தம் 113 சாட்சிகளில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர்.  
புதன்கிழமை அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  யுவராஜ் தரப்பு வழக்குரைஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ  நீதிமன்றம் வராததால்,  சாட்சிகள் விசாரணையை  வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஹெச்.இளவழகன் ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com