விளம்பரப் பதாகைகள் வைக்க கட்டுப்பாடு: ஆட்சியர்

விளம்பரப் பதாகைகள் வைக்க மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளார்.

விளம்பரப் பதாகைகள் வைக்க மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளார்.
இது தொடர்பாக  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் விளம்பரத் தட்டிகள், பதாகைகள் வைப்பதற்கு நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விளம்பரப் பதாகைகள் வைக்க உத்தேசித்துள்ள தேதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அதற்குரிய படிவம் 1-இல் விண்ணப்பிக்க வேண்டும். டிஜிட்டல் தட்டிகள், விளம்பரப் பதாகைகள் வைக்கப்படும் இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பட்டாதாரரிடமும், அரசுக்குச் சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும் தடையின்மைச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக காவல் துறையினரிடமும் தடையின்மைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் அனுமதி கோரப்படும் இடத்தின் கூட்டு புல வரைபடத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அனுமதி கட்டணம் மற்றும் வைப்புத் தொகை செலுத்தியதற்கான அசல் சலானை இணைத்து சமர்ப்பிக்கவேண்டும். டிஜிட்டல் தட்டிகள் , விளம்பர பதாகைகள் வைக்க அனுமதிக்கப்படும்பட்சத்தில் அனுமதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நடைபாதை இல்லாத சாலைகளில், சாலையின் விளிம்பில் இருந்து 10 அடி இடைவெளிவிட்டு டிஜிட்டல் தட்டிகள், விளம்பர பதாகைகள் நிறுவப்பட வேண்டும். 
சாலைகள் அல்லது நடைபாதைகளுக்கு இணையாகவே தட்டிகள், விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாலையின் குறுக்கில் நிறுவப்படக்கூடாது. மேலும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், சாலை ஓரங்கள், சாலை சந்திப்புகள், நினைவுச்சின்னங்கள், உருவச் சிலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வைக்கக்கூடாது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
டிஜிட்டல் தட்டிகள், விளம்பரப் பதாகைகள் உரிய அனுமதி பெற்று ஆறு நாள்களுக்கு மட்டுமே நிறுவப்பட வேண்டும். அதன் பின்னர் அனுமதி பெற்றவர் அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி சுற்றுச்சுழல் மற்றும் உடல்நலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அழிக்கப்பட வேண்டும்.
டிஜிட்டல் தட்டிகள், விளம்பர பதாகைகளில் கீழே மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண், தேதி, அனுமதி காலம், அனுமதிக்கப்பட்ட அளவு, அச்சகத்தின் பெயர் ஆகியவை தவறாமல் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விவரங்கள் இடம்பெறாத டிஜிட்டல் தட்டிகள், விளம்பரப் பதாகைகள் முறையற்றவைகளாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com