சாலை விதிகளை சரியாகப் பின்பற்றினால்  விபத்துகளைக் குறைக்க முடியும்

சாலை விதிகளை சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

சாலை விதிகளை சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் டிரினிடி கலை, அறிவியல் கல்லூரியில் "குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அமைப்பின் சார்பில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தார்.  செயலர் கே. நல்லுசாமி, இயக்குநர் பி. தயாளன், முதல்வர் எம்.ஆர். லட்சுமிநாராயணன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாமக்கல் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்  ஜி. துரை ரங்கநாதன் பங்கேற்றுப் பேசியது:
சாலை விபத்து அதிக அளவில் நடப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.  அதே போல், இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர்.  பாதசாரிகள், பயணிகள், மிதிவண்டி மற்றும் மோட்டார் வாகன ஓட்டிகள் இவர்களில் யாராவது ஒருவர் செய்யும் தவறினால்தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
ஒருவழிப் பாதை பயணம், அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகன ஓட்டுநர்களுக்குப் போதிய பயிற்சி இன்மை, ஓட்டுநர் கவனக் குறைபாடு, வாகனங்கள் அதிகரிப்பு, வாகனப் பராமரிப்பின்மை, சாலை விதிகளை மீறுவது, முறையாக பராமரிக்கப்படாத சாலைகள் போன்றவையே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். சாலை விதிகளை நாம் அனைவரும் சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும்.  தமிழகத்தில் நான்கு வழிச் சாலைகள் அதிகரித்தாலும் அங்கு தான் அதிக விபத்துகளும் நடக்கின்றன.
வாகன ஓட்டிகளுடன் போக்குவரத்து போலீஸாருக்கு எந்த விதமான முன் விரோதமும் கிடையாது. சாலைப் பயணத்தில் மோட்டார் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு ரசீது வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் நிச்சயமாக தலைக் கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கையில் சீட் பெல்ட் அணிய வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் அவர்கள் மேல் போலீஸார் வழக்குப் பதிவு செய்வது கிடையாது.  சாலைப் பயணத்தில் மகளிர் கவனமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம் மகளிர்களுக்கும் மிகவும் அவசியம்.  தலைக்கவசம் விலை மதிப்பில்லாத உயிரை காக்கும் என்றார்.
முன்னதாக இந் நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றப் பொறுப்பாளர் எம்.சசிகலா வரவேற்றார்.  வணிகவியல் துறைத் தலைவர் ஜி. செல்வலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்து காவலர்கள் எஸ். தனசேகரன், எம். கேசவன், பி. பாலு, எம். மகாதேவன்,  கல்லூரி நிர்வாக அலுவலர் என்.எஸ். செந்தில்குமார், டிரினிடி போக்குவரத்து மேலாளர் எஸ். ஜனார்த்தனன்,  வணிகவியல் துறைப் பேராசிரியைகள்,  டிரினிடி கல்லூரி நிறுவனங்களின் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை மாணவி எம். சத்யா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com