நாமக்கல்

காந்தியடிகளை "மகாத்மா' என அடையாளப்படுத்தியவர் தமிழர்: த.ஸ்டாலின் குணசேகரன்

DIN

சுதேசமித்ரன் இதழின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தான், காந்தியடிகளை "மகாத்மா' என அடையாளப்படுத்தினார் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி சார்பில், அண்ணலின் அடிச்சுவட்டில் எனும் காந்திய பேருந்துப் பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்கள், மதுரை காந்தி அருங்காட்சியக பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. வேங்கடரமணா தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் வந்தனர்.
மகாத்மா காந்தி இந்த ஆஸ்ரமத்துக்கு வந்த போது தங்கிய இடம், அவர் ஆஸ்ரமத்தில் உள்ள நோட்டில் எழுதிய குறிப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து, ஆஸ்ரமத்தில் நடைபெற்று வரும் வேப்பம் புண்ணாக்கு, மெத்தை தயாரிப்பு உள்ளிட்ட அலகுகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரம தலைவர் எ.தேவராஜ், செயலர் எம்.குமார், பொருளாளர் கே.சிதம்பரம் ஆகியோர் ஆஸ்ரமத்தை சுற்றிக்காட்டி, ஆஸ்ரமத்தை தோற்றுவித்த ராஜாஜி குறித்தும், அவர் ஆஸ்ரமத்தை தொடங்கக் காரணம் குறித்தும் மாணவர்களிடையே பேசினர். 
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியது: உலகத் தலைவர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் மகாத்மா காந்திடிகள். அவர், 24 வயதில் இளம் பாரிஸ்டராக வழக்குரைஞர் தொழில் செய்ய 1893-ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் தென்னப்பிரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் சென்றார்.
அதே ஆண்டு, அதே பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமாக அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் நடைபெறும் சர்வமத சபை மாநாட்டில் கலந்துகொள்வற்காக புறப்பட்டார் 30 வயது இந்திய இளைஞர் வீரத்துறவி விவேகானந்தர். 
வெளிநாடு சென்ற இந்த இரண்டு இளைஞர்களுமே, இருவேறு துறைகளில் இந்தியாவின் அடையாளங்களாகவே கருதப்படத்தக்க அளவில் உயர்ந்தனர்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாலசுந்தரம் என்ற தமிழர் ஆங்கிலேய எஜமானன் தன்னை தாக்கியதை எதிர்த்து காந்தியிடம் வழக்கு கொடுக்க வந்தார்.
நிறவெறிகொண்ட ஆங்கிலேயருக்கு எதிராக பாலசுந்தரத்தின் சார்பில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்த பாலசுந்தரம் என்ற தமிழர் தான், சாதாரண வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த தனக்கு, இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் படும் இன்னல்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு காரணமாக இருந்தவர் என்ற கருத்தை பலமுறை குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள். 
16 வயது மாணவியாக இருந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழ்ப் பெண், காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றதும், சிறையில் உடல் நலிவுற்று பின்னர் விடுதலையாகி இளம் வயதிலேயே மரணமடைந்ததும் காந்தியடிகளை மிகவும் மனதளவில் பாதித்த சம்பவமாகும்.
இவர்களோடு நாகப்பன், நாராயணசாமி, செல்வன், சூசை, பச்சையப்பன் உள்ளிட்ட சில தமிழர்களும் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற வெள்ளை நிறவெறி ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தில் இறங்கி உயிர்ப்பலி கொடுத்தனர்.
காந்தியடிகளின் களப் போராட்டத்துக்கு கரம் கொடுத்த தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் தியாகம்தான், தமிழர்கள் மீது கடைசி வரை காந்தியடிகளை தனிக் கரிசனம் கொள்ள வைத்தது. 
தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக காந்தியடிகள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்த காலக் கட்டத்திலேயே, தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த சுதேசமித்ரன் இதழில் தலையங்கம் எழுதிய அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், காந்தியடிகளை "மகாத்மா' என குறிப்பிட்டார்.
காந்தியடிகள் இந்தியாவுக்கு 1915-இல் திரும்புவதற்கு முன்பே "மகாத்மா' என்று ஒரு தமிழரால் அடையாளப்படுத்தப்பட்டது, தமிழர்களின் தீர்க்க தரிசனப் பார்வைக்கு ஓர் உதாரணமாகும். அதன்பின்னர் பாரதி, தாகூர் போன்ற கவிவேந்தர்கள் காந்தியடிகளை "மகாத்மா' என்று அழைத்தும், குறிப்பிட்டும் மகிழ்ந்தனர்.
1915-ஆம் ஆண்டு காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தபோது, சென்னை ரயில் நிலையத்துக்கு சென்று காந்தியடிகளையும், கஸ்தூரிபா காந்தியையும் வரவேற்ற கல்லூரி மாணவர்கள், அவரை அழைத்துச்செல்வதற்காக ரயில் நிலையத்தின் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த சாரட் வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு தாங்களே சாரட் வண்டியை சென்னை நகர வீதிகளில் இழுத்துச் சென்றது ஒரு வரலாற்றுச் செய்தி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT