ராசிபுரம்- புதுச்சத்திரம் பகுதியில் ரூ.94.86 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

ராசிபுரம்- புதுசத்திரம் பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 247 பயனாளிகளுக்கு ரூ.94.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட


ராசிபுரம்- புதுசத்திரம் பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 247 பயனாளிகளுக்கு ரூ.94.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் வழங்கினர். 
ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமை வகித்தார். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் , சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 17 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 6 பேருக்கு காதொலிக் கருவி, 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி, இருவருக்கு வங்கி கடனுதவி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதே போல் புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் 247 பயனாளிகளுக்கு ரூ.94.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராசிபுரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டங்களில் ஒன்றாகிய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடத்துக்கான உரிமை வழங்கும் வகையில் 220 நபருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. 
மேலும், இடம் உள்ளவர்கள் முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கும், ஏற்கெனவே பட்டா இல்லாத இடங்களில் வீடுகட்டியுள்ளவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் நகரில் புதிய பூலாம்பட்டி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நகரில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
விழாவில் அமைச்சர் வி.சரோஜா பேசுகையில், மறைந்த ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக சமூக நலத்துறையின் எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார். ராசிபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.வி.எம். பாலசுப்ரமணியன், ஓ.செளதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.பி.தாமோதரன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com