தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார் மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும்

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார் மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி. 
     நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள இலந்தக்குட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.20)  திறந்து வைத்தார்.  
 இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  நாமக்கல் மாவட்டத்தில் இலந்தக்குட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறந்துள்ளது. இப் பகுதியில் நெல் மகசூல் நிகழாண்டு அதிகம் கிடைத்துள்ளது.  விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை இம் மையம் தடையின்றி பெற்றுக் கொள்ளும். குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,840 விலை கொடுக்கப்படும்.  தனியாரை விட ரூ.100 கூடுதலாக இம் மையத்தில் விலை கொடுக்கப்படும். 
    சென்னை போன்ற மாநகராட்சிகளில் மின் விநியோக பெட்டிகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன.  17,000-க்கும் மேற்பட்ட மின் விநியோக பெட்டிகள் வாங்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் 80,000 மின் விநியோக பெட்டிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  இவற்றில் 50 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. 
    கன மழை பெய்தாலும்,  அப் பெட்டிகள் பாதிக்காத வகையில்,  அவற்றின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  இதனால் சீரான மின் விநியோகம் செய்யப்படும்.  பிற மாநகராட்சிப் பகுதிகளில் மின் விநியோகப் பெட்டிகள் சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஈரோடு மாநகராட்சியில் பழைய நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி நிலைமைக்கு ஏற்ப புதைவட மின் கம்பிகள் மற்றும் மின் விநியோகப் பெட்டிகள் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
   தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு 80,000 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.  விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.  இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.  ஏற்கெனவே வினாத்தாள் வெளியானதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு இல்லை என நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 325 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் பிரச்னை இல்லை.  அதனைத் தொடர்ந்து ஒயர்மேன்,  போர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.
   மாநில அரசு பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 அளிப்பது உள்ளிட்ட சிறந்த நலத் திட்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் உள்நோக்கத்துடன் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.
   இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் ஜாமீன் பெற்றனர் என்பது,  அக் கட்சிதான் பின்புலத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் உரிய பதிலளிப்பார்கள்.  மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com