2 கின்னஸ் சாதனைகள் படைத்த சேலம் கராத்தே வீரர்: அரசு வேலை வழங்கக் கோரிக்கை

சேலத்தைச் சேர்ந்த கராத்தே வீரர் நடராஜ், ஸ்ட்ராக்களை கையால் பிடிக்காமல் வாயில் வைத்தும்,

சேலத்தைச் சேர்ந்த கராத்தே வீரர் நடராஜ், ஸ்ட்ராக்களை கையால் பிடிக்காமல் வாயில் வைத்தும்,  ஸ்ட்ராக்களை கையால் பிடித்துக் கொண்டு வாயில் வைத்தும் இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.
சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கராத்தே வீரர் நடராஜ் விளையாட்டுத் துறையில் அரசு வேலை தரக் கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம்,  இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் நடராஜ் (38).  கராத்தே பயிற்சியாளரான இவர், அந்தப் பகுதி பள்ளி மாணவ,  மாணவியருக்கு கராத்தே கற்றுக் கொடுத்து வருகிறார்.  இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கின்னஸ்  அமைப்பின் அனுமதி பெற்று,   புதிய சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  அதாவது ஒரே நாளில் 5 சாதனைகளை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 
இதையடுத்து,  அவர் நிகழ்த்திய 5 சாதனை முயற்சிகளில்  2 சாதனைகளை அங்கீகரித்து கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இதில் பிறர் செய்த சாதனைகளை முறியடித்து மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார். 
அதில் முதலாவதாக 650 ஸ்ட்ராக்களை  (உறிஞ்சு குழல்) கையால் பிடிக்காமல் 2.10 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்துள்ளார்.  இதற்கு முன்பு ஒடிஸாவைச்  சேர்ந்த மனோஜ்குமார் மகாராணா என்பவர்,  459 ஸ்ட்ராக்களை  10 விநாடிகள் வைத்திருந்த சாதனையை நடராஜ் முறியடித்துள்ளார். 
இதில் இரண்டாவது சாதனையாக 692  ஸ்ட்ராக்களை கையால் பிடித்துக் கொண்டு வாயில் 2.56 நிமிடங்கள் வைத்திருந்தார். 
இதற்கு முன்னதாக மும்பையைச் சேர்ந்த கின்னஸ் ரிஷி என்பவர் 496 ஸ்ட்ராக்களை கொண்டு இதே போன்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  அந்த சாதனையை நடராஜ் முறியடித்துள்ளார்.  இதே போல, மூன்றாவது சாதனை முயற்சியாக 4 அங்குல அளவுள்ள ஆணிகளை ஒவ்வொன்றாக எடுத்து 30 விநாடிகளில் 17 முறை,   மூக்கில் நுழைத்துள்ளார். 
இதில் நான்காவது சாதனை முயற்சியாக 4 அங்குலம் கொண்ட ஓர் ஆணியை 30 விநாடிகளில் 32 முறை மூக்கில் நுழைத்தும் நடராஜ் சாதனை படைத்தார். 
கடந்த 2015-ஆம் ஆண்டில்  கனடா நாட்டைச் சேர்ந்த பர்னாபி கியூஆர்பெக்ஸ் என்பவர்,  4 அங்குல ஆணியை 30 விநாடியில் 15 முறை மூக்கில் வைத்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நடராஜ் முறியடித்தார். இதைத் தொடர்ந்து,  கயிற்றைப் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கியவாறு 45 விநாடியில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 
இதில் அவர்,  560 மில்லி லிட்டர் தண்ணீரைக் குடித்து புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.  இதில் தலைகீழாகத் தொங்கியவாறு தண்ணீர் குடிக்கும் முயற்சியைத் தவிர்த்து நான்கு சாதனை முயற்சிகளுக்கு கின்னஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.  இதில் முதல் இரண்டு சாதனைகளை அங்கீகரித்து கின்னஸ் நிறுவனம் சான்றிதழ்களை கடந்த வாரம் நடராஜுக்கு அனுப்பி வைத்துள்ளது. 
இதையடுத்து,  இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்த கராத்தே வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  இதனிடையே சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய கராத்தே வீரர் நடராஜ்  தனக்கு  வேலை வழங்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கராத்தே வீரர் நடராஜ் கூறுகையில்,  நான் முதலில் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன்.  அதற்கு பிறகு வீட்டில் இருந்தவாறு 10,  12 ஆம் வகுப்புகள்  முடித்து பி.ஏ. சமூகவியல் படிப்பை முடித்துள்ளேன்.  தற்போது சேலத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு உடற்பயிற்சி ஆசிரியர் படிப்பை படித்து வருகிறேன். கராத்தே வீரராக இருந்து 2 உலக சாதனைகளை கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளது.  சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எனக்கு விளையாட்டுத் துறையில் அரசு வேலை வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com