சேலம் புத்தகக் கண்காட்சி நிறைவு: ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் தகவல்

சேலம் புத்தகக் கண்காட்சியில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

சேலம் புத்தகக் கண்காட்சியில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் நவம்பர் 9 -ஆம் தேதி முதல் நவம்பர் 21- ஆம் தேதி வரை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. விழாவுக்கு சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார்.  சேலம் மாவட்டத்தில் 40 ஆயிரம் மாணவ, மாணவியர், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் என சுமார் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். 
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று பேசியது:  முயற்சித்தால் இயலாதது எதுவுமில்லை.  உதாரணமாக நான் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். என்னுடைய தாய்மொழி மராட்டி.  நான் என்னுடைய அலுவலகத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாசித்துப் பழகியதாலேயே இன்று மேடையில் தமிழில் உரையாடும் திறன் பெற்றேன்.  நாம் பணியாற்றும் துறையில் நல்ல தலைவனாக விளங்க வாசிப்பு பழக்கமே அடிப்படைத் தகுதியாகும். அதற்கு இளம் வயதிலேயே பல்வேறு நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசித்துப் பழக வேண்டும்.  கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் திருவள்ளுவர் வாக்கைப் போல் புத்தகங்களின் வாயிலாக நாம் பெறுகின்ற அறிவு உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நம்மை சிறப்படையச் செய்யும். 
மாணவர்கள் கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் பாடப்புத்தகம் மட்டுமல்லாது பொதுஅறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும். எனது பள்ளிப் பருவத்தில் என்னுடைய உறவினர்கள் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்திய போதும் என்னுடைய பெற்றோர், என்னை புத்தகங்களைப் படிப்பதற்கு ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கமே என்னுடைய முன்னேற்றத்துக்கு காரணமாகும். புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நாம் பெறுகின்ற அறிவினால் எந்த ஒரு சவாலையும் வெற்றி கொள்ளும் தைரியம் நமக்குக் கிடைக்கும். இந்த வருடம் சேலம் முதலாவது புத்தகத்திருவிழா வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இவ்விழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். இனி வரும் ஒவ்வொரு வருடமும் சேலத்தில் புத்தகத் திருவிழா நடக்கும் என்று உறுதியளிக்கிறேன். எனவே மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, சக்திவேல்,  சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பா.விமலன்,  அன்பரசி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com