உணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும்: துணை வேந்தர் பொ.குழந்தைவேல்

உணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும் என பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக உணவுத் திருவிழாவில் தலைமையுரையாற்றிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர்


உணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும் என பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக உணவுத் திருவிழாவில் தலைமையுரையாற்றிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் ஊட்டச் சத்துத் துறை மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திருவிழா மற்றும் மண்பாண்டக் கண்காட்சியைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தியது.
விழாவில் தலைமையுரையாற்றிய துணை வேந்தர், நமது பாரம்பரியமிக்க கலையான மண்பாண்டங்களைப் பயன்படுத்துவது உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகவும் உகந்ததாகும். மண்பாண்டம் அல்லாமல் மற்ற கொள்கலன்களைக் கொண்டு சமைக்கும் போது, அடுப்பின் வெப்பநிலையில் சமைக்கும் கொள்கலம் உணவுப் பொருள்களுடன் வேதிவினை புரிந்து பல நோய்களை உருவாக்குகிறது. ஆனால், மண்பாண்டக் கொள்கலன்களில் அவை விஷ முறிவுத் தன்மை கொண்டதாக உள்ளது. எனவே, நாம் நமது வீடுகளில் மண்பாண்டத்தாலான கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஆற்றல் இல்லாத நிலையில் உருவாகும் பசி என்பது கோபத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அதேபோல நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும் என்றார்.
விழாவில் பேசிய குலாளர் சங்கத் தலைவர் பி.சுப்பிரமணி, பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் அதிகளவில் மண்பாண்டங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் குலாளர் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.டி. தியாகராஜன், மண்டல இயக்குநர் பி.மோகன் ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோரை உணவு அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டி.பூங்கொடி விஜயகுமார் வரவேற்றார். பல்கலைக்கழக வளாகத்தில் மண்பாண்டத்தால் உருவாக்கப்பட்ட பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com