சேலத்தில் இளம்பெண் மீது அமிலம் வீச்சு

சேலத்தில் பட்டப் பகலில் இளம்பெண் மீது அமிலம் வீசிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


சேலத்தில் பட்டப் பகலில் இளம்பெண் மீது அமிலம் வீசிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், காயத்ரியும், அதே பகுதியைச் சேர்ந்த மரக்கடையில் வேலை செய்து வரும் சீனிவாசனும் (40) நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இதுகுறித்து அறிந்த பாலமுருகன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.
இதையடுத்து, காயத்ரி வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாராம். மேலும், கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சீனிவாசனுடன் பேசுவதை காயத்ரி தவிர்த்து வந்துள்ளார். இதனால் சீனிவாசன் கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் தம்மண்ணன் சாலையில் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்குச் சென்று கொண்டிருந்த காயத்ரியை வழிமறித்த சீனிவாசன், அவருடன் தகராறில் ஈடுபட்டாராம்.
இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், தான் மறைத்து வைத்திருந்த அமிலத்தை காயத்ரி மீது வீசிவிட்டு தப்பிச் சென்றார். அமில வீச்சால் காயமடைந்த காயத்ரி அலறினார். அதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சீனிவாசனைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com