புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

சங்ககிரி மலைக்கோட்டை பாதை சீரமைக்கப்படுமா?

DIN | Published: 12th September 2018 07:52 AM

சங்ககிரி மலைக்கோட்டையில்  பாதைகள் சேதமடைந்தும், செடி, கருவேல மரங்கள் பாதைகளை மறைத்து வளர்ந்தும் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இத்தலத்தை சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக் கோட்டையில் 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீர்ச்சுனைகள், பதினைந்துக்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள்,  தர்காக்கள், கொலைக் களங்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் உள்ளன.
மலைக்கு செல்லும்போது உள்ள முதல்கோட்டை புலிமுக வாசல் என்றும், 2-ஆவது நுழைவு வாயில் கல்கோட்டை வாசல் என்றும், 3-ஆவது நுழைவு வாயில் கடிகார வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இதனையடுத்து பழைமை வாய்ந்த அருள்மிகு வரதாரஜ பெருமாள் கோயில் உள்ளது. இதையடுத்து  4-ஆவது நுழைவு வாயில் முதல் 10 ஆவது நுழைவு வாயில் வரை இந்த மலைக்கோட்டையில் பாதை செல்கிறது. மலை உச்சியில் இஸ்லாமியர்கள் தர்காவும், மற்றொரு புறம் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலும் உள்ளன.
இந்தக் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு நடைபெறுகிறது. இதில் அதிகமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். நிகழாண்டும் புரட்டாசி மாதத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கு வந்து செல்வர்.
இந்த நிலையில் மலைப்பாதை கவனிப்பாரின்றி சேதமடைந்தும், செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து பாதைகளை மறைத்து உள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலையின் அடிவாரத்தில் சிலர் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருவதால் பெண் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் தேய்ந்து கண்டுகொள்வாரில்லாமல் உள்ளது. சிறப்புமிக்க இந்த வரலாற்றுத் தலத்தில் போர்க்கால அடிப்படையில் மலைப் பாதைகளை சீரமைத்து, செடிகள், மரங்களை அகற்ற தொல்லியல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More from the section

வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வைக்கோல் விலை வீழ்ச்சி
தேவூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
தம்மம்பட்டி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
முதிர்வு தொகை வழங்கக் கோரி ரயில் நிலையம் முற்றுகை: 300 பேர் கைது