18 நவம்பர் 2018

வெள்ளிப் பட்டறையில் சிறார் தொழிலாளர் மீட்பு

DIN | Published: 12th September 2018 07:53 AM

சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் பணிபுரிந்த சிறார் தொழிலாளரை தொழிலாளர் துறையினர் மீட்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையக் கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் கூடுதல் விலையில் விற்கப்படுவதாக புகார் பெறப்பட்டது. அதன்பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி தலைமையில்  சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், இரண்டு கடைகளில் அதிக விலைக்கு விற்றது கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. 
மேலும், சேலம், குகை, லைன்மேடு பகுதியில் வெள்ளிப் பட்டறைகளில் சிறார் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள வெள்ளிப் பட்டறைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு வெள்ளிப் பட்டறையில் ஒரு சிறார் தொழிலாளி பணியில் ஈடுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, அவர் குழந்தை நலக்குழு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.  
சிறார் தொழிலாளியை பணிக்கு அமர்த்திய வெள்ளிப் பட்டறை உரிமையாளர் மீது சிறார் தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-இன் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது.
பொருள்களை அதிக விலைக்கு விற்றல், பணியில் சிறார் தொழிலாளர்களை ஈடுபடுத்துதல் குறித்து ஏதேனும் தெரியவந்தால் (டிஎன்எல்எம்சிடிஎஸ்) என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ரங்கசாமி, ஞானசேகரன், சீனிவாசன், சிவக்குமார், தேசிய சிறார் தொழிலாளர் திட்ட களப் பணியாளர் யுவராஜ் மற்றும் சைல்டு லைன் பணியாளர் ஆகியோர் ஈடுபட்டனர்.

More from the section

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தம்மம்பட்டியில் நாளை இலவச கண்சிகிச்சை முகாம்
சங்ககிரியில் முதல்வருக்கு  வரவேற்பு
ஓமலூர், தம்மம்பட்டியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திமுக செயல்வீரர்கள் கூட்டம்