பசுமை சாலைத் திட்டத்துக்கு ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனை: விவசாயிகள் எதிர்ப்பு

சேலம் - சென்னை 8 வழிச் சாலைக்காக சன்னியாசிகுண்டு ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனைக்கு

சேலம் - சென்னை 8 வழிச் சாலைக்காக சன்னியாசிகுண்டு ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனைக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - சென்னை இடையே 277 கிலோ மீட்டரில் பசுமை வழிச் சாலை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் நிலம் எடுப்புக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை நிலங்களில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லையெனில் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் அருகே சன்னியாசிகுண்டு ஜருகுமலை பகுதியில் 8 வழிச் சாலைக்காக சுரங்கப் பாதை அமைத்திட தேன்மலை என்ற பகுதியில் மலையின் மீது இயந்திரங்கள் அமைத்து, மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 
இந்த மண் பரிசோதனை குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட உள்ள பொது மக்கள், சம்பந்தப்பட்ட மலைக்கு நேரில் சென்று மண் பரிசோதனை நடைபெறும் இடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். 
அங்கு பணியில் இருந்தவர்களிடம், நீதிமன்ற உத்தரவையும் மீறி பணிகள் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து மண் பரிசோதனை நடைபெறும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். 
மலையில் இருந்த விவசாயிகள் மற்றும் பொது மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மலையில் இருந்து கீழே வந்த விவசாயிகள், நீதிமன்ற உத்தரவையும் மீறி, தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 
இது போன்ற நடவடிக்கையால் விவசாயிகளை தொடர்ந்து அரசு துன்புறுத்தி வருகிறது. இது போன்ற நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com