சங்ககிரியை நெகிழிப் பை இல்லா நகரமாக்க முயற்சி

சங்ககிரியில் நெகிழிப் பைகளை பயன்படுத்தாத வண்ணம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட

சங்ககிரியில் நெகிழிப் பைகளை பயன்படுத்தாத வண்ணம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட, முதல்கட்டமாக எளிதில் மக்கக்கூடிய துணிப் பைகளை ரோட்டரி சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இயற்கையான சங்ககிரியாக மாற்றம் செய்ய சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரியும் சேர்ந்து ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு வளர்த்து வருகின்றனர். அதனையடுத்து, சங்ககிரி நகர் பகுதியில் பொதுமக்கள் நெகிழிப் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க எளிதில் மக்கக்கூடிய துணிப் பைகளை சங்ககிரி ரோட்டரி சங்கம் வடிவமைத்துள்ளது. முதல்கட்டமாக 10 ஆயிரம் துணிப் பைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரு பகுதியாக, 1,500 துணிப் பைகளை இலவசமாக  வழங்க
திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, சங்ககிரி அருகே மோரூர் ஏரிக் கரையில் பனை விதைகளை பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பசுமை சங்ககிரி நிர்வாகிகளிடம் வழங்கி அதுகுறித்த பயன்கள் பற்றி துணிப் பைகளை வடிவமைத்த ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடஸ்வர குப்தா பேசியது:
நெகிழிப் பைகளை தவிர்த்து எளிதில் மக்கக்கூடிய துணிப் பைகளை பயன்படுத்துவதன் மூலம், சங்ககிரி பேரூராட்சியில்  சுமார் 50 டன் அளவுக்கு நெகிழிப் பைகள் பயன்பாடு தவிர்க்கப்படும். பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கும் போது, கடைக்காரர்களிடம் நெகிழிப் பைகளை கேட்டு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும்.
முதல்கட்டமாக 1,500 துணிப் பைகளை பள்ளி மாணவ, மாணவியர் மூலம் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். தனியார் நிறுவனங்கள் ரோட்டரி சங்கத்துடன் இணைந்தால், மேலும் துணிப் பைகளை இலவசமாக வழங்கி சங்ககிரியை நெகிழிப் பைகள் பயன்படுத்தாத நகரமாக மாற்றம் செய்யலாம். அதற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 
அதனையடுத்து, சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பியிடம் துணிப் பையை வழங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் எஸ்.ராமசாமி, சிகேஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com