பருவ நிலை குறித்த நூறாண்டுத் தரவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன: வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் தகவல்

பருவநிலை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம் நூற்றாண்டு காலத் தரவுகளை ஆவணப்படுத்தியுள்ளதாகவும்

பருவநிலை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம் நூற்றாண்டு காலத் தரவுகளை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மேம்பட்ட ஆய்வுகளை நிகழ்த்தி, வரும் காலங்களில் காலநிலை மாற்றங்களைத் துல்லியமாக அறிய முடியும் என வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சார்பில் "வெள்ளம், வறட்சி மேலாண்மை நடைமுறைகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் "இயற்கை அதீத நிகழ்வுகளின் களமாக மாறியுள்ளது. எதிர்பாராத தருணங்களில் எதிர்பாராத பருவநிலை மாற்றங்கள் உருவாகி வருகின்றன.
அணைக்கட்டு மேலாண்மை, கட்டமைப்பு உருவாக்கம், நீர்ப்பாசன மேலாண்மை போன்ற காரணிகளால் கால நிலையில் அதீத மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதனால், வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்றவை மாறி மாறி முறை திரிந்து உருவாகின்றன. பூமியின் இயற்கைத் தன்மை மாறுகிறது. நிலம், கடல் , காற்று மண்டலம் இணைந்துதான் கால நிலை மாற்றத்தை உருவாக்குகின்றன.
நம்மிடம் கால நிலையைக் கணிப்பதற்கான அதிநவீன கருவிகள் உள்ளன. அதைப் போல நூறாண்டு கால தரவுகளும் உள்ளன. எனவே, ஆய்வாளர்கள் நம்மிடம் உள்ள தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு இயற்கையின் இயல்புத் தன்மையை பாதுகாக்க முன்வர வேண்டும்' என்றார். கருத்தரங்கில் தலைமை வகித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பேசினார். 
நிகழ்ச்சியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் ஏ.கே.சிங், கர்நாடக மத்திய பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை புல முதன்மையர் எம்.ஏ. முகமது அஸ்லாம் உள்ளிட்டோர் பேசினர்.
புவியமைப்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆர். சுரேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com