சேலம்

வழிப்பறி, நகை கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

DIN

சேலத்தில் வழிப்பறி, நகை கொள்ளையில் ஈடுபட்டவரை காவல் துறையினர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.
ஓமலூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (57). இவர், சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து 43 பவுன் எடையுள்ள தங்க நகைகள், அரைஞான்  வெள்ளிக் கொடி மற்றும் ரொக்கப் பணம் ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளார்.
இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
மேலும் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி ஜங்ஷன் சாலையில் சதா காபி பார் அருகே வந்துகொண்டிருந்த காடையாம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரை மாரியப்பன் வழிமறித்து அவரிடமிருந்து ஒரு பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
மேலும் அப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மாரியப்பனைப் பிடிக்க முயன்றபோது, பொதுமக்களிடமும் கொலை மிரட்டல் விடுத்து, பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டார்.
இதுகுறித்து கடந்த ஜனவரி 24-ஆம் தேதி மாரியப்பனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மாரியப்பன் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் கொள்ளையடித்த தங்க நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த நிலையில் மாரியப்பன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதியைக் கெடுக்கும் வண்ணம் நடந்து கொண்டமையால் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் சி.சியாமளாதேவியின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர், மாரியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க வியாழக்கிழமை ஆணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து மாரியப்பன் குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT