சேலத்தில் ரூ.1,500 கோடியில் அமைகிறது: பிரமாண்ட "பஸ் போர்ட்'! விமான நிலையம் போல கட்டப்படுகிறது

சேலத்தை அடுத்த மாமங்கம் அரபிக் கல்லூரி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகில் 62 ஏக்கரில் சுமார்

சேலத்தை அடுத்த மாமங்கம் அரபிக் கல்லூரி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகில் 62 ஏக்கரில் சுமார் ரூ.1,520 கோடியில் விமான நிலையத்தில் உள்ளது போன்ற வசதிகளை உள்ளடக்கிய "பஸ் போர்ட்' (நவீன பேருந்து நிலையம்) அமைகிறது.
சேலம் நகரில் உள்ளூர் பேருந்துகள் வந்து போகும் இடமாக பழைய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.  தற்போது பழைய பேருந்து நிலையப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.  அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை,  கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனால் சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது.  இதனால், ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து, போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. 
நிகழாண்டில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காலி இடத்தை சீரமைத்து,  தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.  இருந்த போதிலும், வெளி மாவட்டங்கள் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சேலம் நகருக்குள் வந்து செல்வதால், எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  
அதேபோல,  கோவை வழியாக கேரளம், பெங்களூரு,  மதுரை, சென்னைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்திருப்பதால்,  முக்கியப் போக்குவரத்து சந்திப்பு இடமாக சேலம் உள்ளது.  மேலும்,  ஆம்னி பேருந்துகளும் அதிகளவில் சேலம் நகருக்கு வந்து செல்கின்றன.  
இந்த நிலையில்,  சென்னை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்கவும், கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  
 இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வசதிகளைப் போல சேலம், கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் "பஸ் போர்ட்' தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டுமானத்தில் "பஸ் போர்ட்' அமையவுள்ளது. 


அரபிக் கல்லூரி அருகே
முதற்கட்டமாக கோவை மற்றும் சேலம் ஆகிய இரு நகரங்களில் "பஸ் போர்ட்' அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.  
சேலத்தைப் பொருத்தவரையில் மாமங்கம் அரபிக் கல்லூரி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ள இடத்தில் காலியாக உள்ள 62 ஏக்கரில் "பஸ் போர்ட்' அமைக்கப்பட உள்ளது.  இதற்கான நில அளவை உள்ளிட்ட பணிகளை வருவாய்த் துறையினர் முடித்துவிட்டனர்.  
இந்த நிலையில், "பஸ் போர்ட்' அமையும் இடம் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால், வருவாய்த் துறை வசம் உள்ள இடத்தை, மாநகராட்சிக்கு மாற்றும் நிர்வாகப் பணிகள் நடந்து வருகின்றன.  இன்னும் நிர்வாகப் பணிகள் முடிந்து தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பின்னர் விரைவில் இந்த "பஸ் போர்ட்' பணிகள் தொடங்கும். இந்தப் பணி தொடங்கி 2 ஆண்டுகளில் முடியும்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.  


சென்னை சாலையை இணைக்கும்  புறவழிச்சாலை 
சேலம் "பஸ் போர்ட்' சுமார் 62 ஏக்கரில் ரூ.1,520 கோடியில் அமைகிறது.  அதேபோல, மாமங்கம் பகுதியில் இருந்து அயோத்தியப்பட்டணம் வழியாக மற்றொரு புறவழிச்சாலை அமைத்து, சென்னை செல்லும் சாலையுடன் இணைக்கப்படும் திட்டமும் இதில் அடங்கும்.
இதன்மூலம் சேலத்தில் இருந்து வெளிமாவட்டம் செல்லும் பேருந்துகள் எளிதாக பஸ் போர்ட்டில் இருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்து விடுவதால், சேலம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இனி இருக்காது. 
"பஸ் போர்ட்' என்பது விமான நிலையத்தில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.  பேருந்து செல்ல தனி வழி,  பயணிகள் காத்திருக்கும் அறை, கார், இருசக்கர வாகன நிறுத்தும் இடம்,  வணிக வளாகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் விமான நிலையச் சாயலில் இந்த "பஸ் போர்ட்' அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com