மருத்துவத் துறையில் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை: சொற்பொழிவாளர் சுகி சிவம்

மருத்துவத் துறையில் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என சொற்பொழிவாளர் சுகி சிவம் தெரிவித்தார்.


மருத்துவத் துறையில் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என சொற்பொழிவாளர் சுகி சிவம் தெரிவித்தார்.
சேலத்தில், தினமணி நாளிதழ் சார்பில் ஆரோக்கியம் இலவச மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.  இதில் மருத்துவத் துறையில் விழிப்புணர்வு மக்களுக்கு வளர்ந்துள்ளதா? ஆம், இல்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்தில் நடுவராக பங்கேற்று இரு அணிகளின் கருத்துகளைக் கேட்டு இறுதியாக சொற்பொழிவாளர் சுகி சிவம்  பேசியது:
விழிப்புணர்வு என்பது சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய கருத்துரு ஆகும்.  பொதுவாக, ஹோட்டல்களில் உணவு பரிமாறும்போது கைகளில் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.  ஆனால், இதுபோன்று உணவை கைகளில் எடுத்து பரிமாறக் கூடாது.
இதுபோல, சிறிய விஷயங்களையும் கூட கவனத்துடன் செய்ய வேண்டும்.  மருத்துவத் துறை வியக்கத்தக்க வகையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.  உலகளவில் இந்திய மருத்துவர்களின் நுட்ப அறிவு தலை சிறந்தது.  ஆசிய மருத்துவர்கள் தான் வெளிநாடுகளில் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
அதேநேரத்தில் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.  மேலும் எந்த அளவு மருந்து சாப்பிடுவது என்ற விழிப்புணர்வு அவசியமாகும்.
மருத்துவத் துறையில் விழிப்புணர்வு என்பது,  எப்படி மருந்தை எடுத்துக் கொள்வது என்ற அணுகுமுறைதான் முக்கியமாகும்.  உறவில் திருமணம் செய்வதால், பல்வேறு நோய் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதைப் பார்க்க முடிகிறது.  ஆனால், உறவில் திருமணம் செய்வது இன்றளவும் மாறவில்லை.
மேலும், நன்றாகச் சாப்பிடுவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது கிடையாது.  சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.
ஒரு காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே அச்ச உணர்வு இருந்தது.  இப்போது மருத்துவமனைகளைத் தேடி போய் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது.
அதேவேளையில்,  மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவசியமாகும்.  நல்ல உணவு, சுகாதார பழக்க வழக்கம் முக்கியமாகும்.  நோய்கள், அதற்கான சிகிச்சைகள் குறித்து தாழ்வு மனப்பான்மை கூடாது.  அதேசமயத்தில் மற்றவர்களுக்கு மருத்துவம் சொல்லுதல் கூடாது.
நோயற்ற வாழ்வு சாத்தியம் என்றால் விழிப்புணர்வு வந்துவிட்டது என அர்த்தம்.  மனோபலத்தை வளர்த்துக் கொள்வதன்மூலம் சிறந்த ஆரோக்கியத்தைப் பேணி காக்க முடியும். மரண பயத்தை, நோய் பயமாக மாற்றக் கூடாது.
பெரியார், ராஜாஜி போன்ற தலைவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தனர்.  மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையால் அவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை. 
பூரண ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அது விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியமாகும். எந்த அளவுக்கு மருந்து எடுத்து கொள்வது என்ற விழிப்புணர்வு முக்கியமாகும். மருத்துவத் துறையில் மக்களுக்கு வளர வேண்டிய அளவு விழிப்புணர்வு வளரவில்லை என்றார்.
மருத்துவத் துறையில் விழிப்புணர்வு மக்களுக்கு வளர்ந்துள்ளதா என்ற தலைப்பில் ஆம் என்ற அணியில் மணிகண்டன், சாந்தாமணி, வழக்குரைஞர் சுமதி ஆகியோரும், இல்லை என்ற அணியில் அருட்பிரகாசம், விஜயசுந்தரி, மோகனசுந்தரம் ஆகியோரும் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com