ஆட்டிறைச்சி தர மறுத்த கடை உரிமையாளரை தாக்கியதாக புகார்: உதவி ஆய்வாளர்கள் இருவர் மாற்றம்

சேலத்தில் ஆட்டிறைச்சியை தர மறுத்த கறிக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை தாக்கிய புகார்

சேலத்தில் ஆட்டிறைச்சியை தர மறுத்த கறிக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை தாக்கிய புகார் தொடர்பாக, உதவி ஆய்வாளர்கள் இருவர் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் அருகே கம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்குத்தி கவுண்டர் (75), அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகில் கறிக் கடை வைத்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அன்னதானப்பட்டி காவல் நிலைத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம், சிவபெருமாள் மற்றும் காவலர் சக்திவேல் உள்ளிட்ட மூன்று காவலர்கள் போலீஸ் வாகனத்தில் வந்துள்ளனர்.
பின்னர் வாகனத்தில் இருந்தபடியே, மூக்குத்தி கவுண்டரிடம் இரண்டு கிலோ ஆட்டிறைச்சி தருமாறு பாலசுப்பிரமணியம் அதிகார தொனியில் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, மரியாதையாக பேசுங்கள் என மூக்குத்தி கவுண்டர் கூறினாராம்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தரக்குறைவான வார்த்தைகளால் மூக்குத்தி கவுண்டரை திட்டினாராம். மேலும், அவரை அடித்து வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு காவல் நிலையம் வந்து கண்மூடித்தனமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமார் காவல் நிலையம் வந்து தனது தந்தையை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டுள்ளார். இதையடுத்து விஜயகுமாரையும் காவலர்கள் தாக்கினராம்.
தகவலறிந்த இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் காவல் துறையினரிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, வெற்றுத்தாளில் இருவரிடமும் கைரேகைகளை பெற்றுக் கொண்டு போலீஸார் அவர்களை விடுவித்தனர்.
இதையடுத்து, படுகாயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான தகவல் கட்செவி அஞ்சலில் வேகமாக பரவியது.
இதையறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர், அன்னதானப்பட்டி உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் சிவபெருமாள் ஆகிய இருவரையும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com