செங்கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் கொத்து, செங்கரும்பு, காப்புக்கட்டு பூ விற்பனை திங்கள்கிழமை அமோகமாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் கொத்து, செங்கரும்பு, காப்புக்கட்டு பூ விற்பனை திங்கள்கிழமை அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள், வரும் 21-ஆம் தேதி வரை இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் தங்கியிருப்பவர்கள் வெளி மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் ரயில், பேருந்துகளில் புறப்பட்டு சென்று வருகின்றனர். அதேபோல, சேலம் வந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோரின் கூட்டமும் கணிசமாக உள்ளது. இதனால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது. 
சேலம் கடை வீதி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, ஏற்காடு பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை பால் மார்கெட், ஆனந்தா இறக்கம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனைக் கடைகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு, செங்கரும்பு, வேப்பிலை, ஆவாரம் பூக்களை வாங்கி சென்றனர். இதில் ஒரு ஜோடி கரும்பு ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், மஞ்சள்கொத்து ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், காப்புக்கட்டு பூ ரூ.10, வண்ணக் கோல தூள் ரூ.5 முதல் ரூ.10 வரைக்கும், பொங்கல் பானைகள் ரூ.50 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
போகி பண்டிகையை முன்னிட்டு, படையலுக்குத் தேவையான வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, முருங்கைக் கீரை, பச்சை அவரை, பூசணி, மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
அதேபோல பொங்கல் வழிபாட்டுக்கு பூக்கள் அதிகளவில் தேவை இருப்பதால், குண்டு மல்லி கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.300 ஆக இருந்தது. அதேபோல அரளி பூ ரூ.200-க்கும், சாமந்தி கிலோ ரூ.100, ரோஜா ரூ.240-க்கும், கனாகம்பரம் ரூ.800-க்கும், சன்னமல்லி ரூ.1,500-க்கும் விற்பனையாயின.
தம்மம்பட்டியில்... தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பொருள்கள் விற்பனை இருநாள்களாக சூடுபிடித்து நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். அதேபோல், மாட்டுப் பொங்கலுக்குத் தேவையான மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்ட கயிறு வகைகள், மாடுகளுக்கு கழுத்து மணி, சலங்கைகள், கொம்புகளுக்கு வர்ணங்கள், மாடுகளை அலங்கரிக்க வண்ணப் பொடிகள் என விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.
தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, உலிபுரம், நாகியம்பட்டி, வாழக்கோம்பை, மங்கப்பட்டி, மண்மலை உள்ளிட்ட ஊர்களிலிருந்து பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொங்கல் பொருள்களை வாங்கி சென்றபடி உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com