தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை: பணம், பொருள்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை  அடுத்த  நடுவனேரி அருகே தேர்தல் நிலைகண்காணிப்புக் குழு எண்.3 சார்பில்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை  அடுத்த  நடுவனேரி அருகே தேர்தல் நிலைகண்காணிப்புக் குழு எண்.3 சார்பில் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட வாகன சோதனையில், இரண்டு  வாகனங்களில் உரிய ஆவணமின்றி ரொக்கம் கொண்டு சென்ற இரு நபர்களிடமிருந்து  ரூ. 8 லட்சத்து 94 ஆயிரத்து 240ஐ பறிமுதல் செய்து உதவித் தேர்தல் அலுவலரிடம் குழுவினர் ஒப்படைத்தனர். 
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே உள்ள நடுவனேரியில்,  கொங்கணாபுரம் வேளாண் உதவி இயக்குநர் சண்முகசுந்தரம் தலைமையிலான தேர்தல் நிலைகண்காணிப்புக் குழுவினர் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம்பிள்ளையிலிருந்து காகாபாளையம் நோக்கி சென்ற வேனை சோதனை செய்தனர். அதில் ரூ.7,94,240  ரொக்கம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து குழுவினர்  விசாரணையில், சேலம் திரளெபதிஅம்மன் கோயில் வீதி, கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த  சிகரெட் விற்பனை முகவர் இளங்கோவன் மகன் அழகுவேல் (34)  என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்தக் குழுவினர் அப்பகுதியில் தொடர்ந்து நடத்திய சோதனையில் காகாபாளையத்தில் இருந்து இளம்பிள்ளை நோக்கி சென்ற காரை சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாதது தெரிய வந்தது. குழு விசாரணையில், ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையம்  ஜவுளி வியாபாரம் செய்து வரும் ராமலிங்கம் மகன்  தனசேகரன் (52) என்பது தெரியவந்தது.  இருவரிடமிருந்து ரொக்கத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து நாமக்கள் மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
எடப்பாடி அருகே பணம், புடவைகள் பறிமுதல்
சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில், எடப்பாடியை அடுத்த மொரம்புகாடு பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரைசாமி தலைமையிலான அலுவலர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை பரிசோதித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்
என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதேபோல், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1லட்சத்து 14 ஆயிரத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், ஆம்னி காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 348 புடவைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், நெகமம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
எடப்பாடி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில், சேலத்திலிருந்து
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4 கிலோ எடையிலான வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.
முட்டை வாங்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
கெங்கவல்லியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு  லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் வியாழக்கிழமை நள்ளிரவில் பறிமுதல் செய்தனர்.
 கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான 1ஆவது பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்,  வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தொகுதிக்குள்பட்ட நத்தக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழுப்புரத்திலிருந்து நாமக்கலுக்கு முட்டை வாங்க சென்ற மினி லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய்க்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால், அந்த தொகை பறிமுதல்  செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை கெங்கவல்லி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தொகை வெள்ளிக்கிழமை கெங்கவல்லியிலுள்ள கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
ஆத்தூரில்...
தாண்டவராயபுரத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1லட்சத்து 440-ஐ பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தில் ஜனலட்சுமி நிதி நிறுவன ஊழியர் ராஜேந்திரன் மகன் சதீஸ்குமார் (22). இவர் தான் வசூல் செய்த ரூ.1 லட்சத்து 440-ஐ இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். இந்தத் தொகைக்கான உரிய ஆவணம் இல்லாததால்,  தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஆத்தூர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com