திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே புயலால் சேதம்: பழங்குடியின மக்களுக்கு புதிய வீடு கட்டித் தர கோரிக்கை

DIN

கஜா புயலால் வீடுகளை இழந்துள்ள கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
கடந்த மாதம் 16-ஆம் தேதி கஜா புயல் வீசியதில், கொடைக்கானல் பகுதியில் மலைச் சாலைகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. பல இடங்களில்  மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் வாழை, மிளகு, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட  விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.
மேலும், காமனூர் பகுதியிலுள்ள மங்களம் கொம்பு, கௌரவநாச்சி ஓடை, கடைசிக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. இவற்றில் ஒரு சில இடங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் பார்வையிட்டு, அம்மக்களுக்கு ஆறுதல்  கூறி நிவாரணப் பொருள்களையும் வழங்கினர்.     தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோரும் நிவாரணப் பொருள்கள் வழங்கினர். இருப்பினும், புயல் பாதித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவையான சாலை, குடியிருப்பு, மின்சாரம்  உள்ளிட்ட வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது குறித்து பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் கூறியது: தற்போது குடியிருக்க வீடில்லாமல் இருக்கிறோம். வீட்டு மனைப் பட்டா கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியது: இங்குள்ள பழங்குடியின மக்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா இருந்தால், அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிலங்கள் வழங்குவது குறித்தும், வீடு கட்டிக் கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT