போக்குவரத்துக்குத் தடை: பழனியில் பாலம் கட்டும் பணியை பொதுமக்கள் முற்றுகை

பழனியில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், கட்டுமானப் பணிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்தனர்.

பழனியில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், கட்டுமானப் பணிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்தனர்.
பழனி பாலாஜி ஆலையில் இருந்து சண்முகநதி வரையிலுமான இடத்தில் 4 சிறுபாலங்கள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணிக்காக பாலத்தின் ஒருபகுதி உடைக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு, அவை முடிந்தபின் மறுபாதி உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இச் சாலை குறுகலாக உள்ளதாலும், சாலையை பக்கவாட்டில் மாற்ற இடம் இல்லாததாலும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  மேலும் பணிகள் தாமதம் காரணமாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், வையாபுரி குளத்தில் இருந்து பாசன விவசாயிகளுக்கு இப் பாலத்தின் வழியே தண்ணீர் வழங்க வேண்டியிருந்ததை  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி 20 நாள்களுக்கு பாலாஜி ஆலை முதல் சண்முகாநதி புறவழிச்சாலை வரை போக்குவரத்துக்கு தடை விதித்தும்  இருபது நாள்களுக்குள் நான்கு பாலங்களை கட்டி முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து  இச் சாலையில் போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத் துறையினர் தடை விதித்தனர்.  பழனி புறவழிச் சாலையை மாற்றுச்சாலையாக பயன்படுத்த அறிவிப்புகள் வெளியாகின.  
இந்நிலையில் வியாழக்கிழமை பாலம் பணி செய்ய வந்தவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் முற்றுகையிட்டு பணிகளை தடுத்து நிறுத்தினர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 
அப்போது இச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல மட்டும் தடை விதித்தும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக இரு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், கார்கள் செல்லும் வகையில் பாலம் கட்டும் இடம் அருகே மாற்றுவழி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர்.  இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com