திண்டுக்கல் உள்பட 6 அரசு தலைமை மருத்துவமனைகளுக்குவிழித்திரை அறுவை சிகிச்சைக்கு நவீன லேசர் கருவி

திண்டுக்கல் உள்பட 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு, தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்

திண்டுக்கல் உள்பட 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு, தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் விழித்திரை அறுவை சிகிச்சை செய்வதற்கான நவீன லேசர் கருவி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள கண் சிகிச்சைப் பிரிவுக்கு, நாள்தோறும் 40 நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில், கண்புரை நோய், கண்ணில் வளரும் தோல் பாதிப்பு ஆகியவற்றுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 5 அறுவை சிகிச்சை வீதம், மாதத்துக்கு சராசரியாக 120 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 
ஆனாலும், கண் விழித்திரை நோய்க்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இல்லாததால், நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலேயே விழித்திரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ரூ.15 லட்சம் மதிப்பிலான நவீன லேசர் அறுவை சிகிச்சைக் கருவி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி, தஞ்சாவூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் இந்த நவீன அறுவை சிகிச்சை கருவி வழங்கப்பட்டுள்ளது.  
இதுதொடர்பாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் கூறியது: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண் விழித்திரை அறுவை சிகிச்சைக்கான நவீன லேசர் கருவி செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. கண் சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தனி அறை ஏற்படுத்தப்பட்டு, லேசர் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம், திண்டுக்கல் மாவட்ட மக்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. 
அதேபோல், விழித்திரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com