மதுபானக் கடைக்கு எதிர்ப்பு: வத்தலகுண்டு அருகே சாலை மறியல்

வத்தலகுண்டு அருகே மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

வத்தலகுண்டு அருகே மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள கணவாய்பட்டி கிராமத்தில் கருவேலங்குளம் அருகே, கடந்த 6 மாதத்திற்கு முன்பு மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அந்த கடை அமையவுள்ளதை அறிந்த கணவாய்ப்பட்டி மற்றும் ஆசிரமம் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். இதன் காரணமாக அந்த மதுபானக் கடை திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அந்த கடையின் முன்பு மதுபான பாட்டில் பெட்டிகள் இறக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தையும் மீறி, கடைக்கு மதுபான பாட்டில்கள் வந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடைக்குள் மதுபான பாட்டில்களை வைத்து பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், வத்தலகுண்டு கெங்குவார்பட்டி சாலையில் அமர்ந்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வத்தலகுண்டு போலீஸார் மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால், மதுபானப் பாட்டில்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என பெண்கள் கோஷமிட்டனர்.
 அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களை வரவழைத்த போலீஸார், மதுபாட்டில்களை வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக, வத்தலகுண்டு -கெங்குவார்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com