புரட்டாசி மகா சனி பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல், போடி, பழனியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன


புரட்டாசி மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல், போடி, பழனியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி முதல் சனிக்கிழமையில், பிரதோஷ வழிபாடும் இணைந்து கொண்டதால், சிவாலயங்களில் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில், கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், நெய், பஞ்சாமிர்தம், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. பின்னர் ஆனந்த வல்லி சமேத கைலாசநாதர் ரிஷப வாகனத்தில், கோயில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார்.
அதேபோல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரர், மூலவர் பத்மகிரீஸ்வரர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
நத்தம்: நத்தம் அருகே, கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலிலும், சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது.
போடி: போடி பரமசிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷ பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கும், சங்கரநாராயணனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் முத்துச்சாமி, அர்ச்சகர் சேகர் உள்ளிட்டோர் செய்தனர்.
இதேபோல் கீழச்சொக்கநாதர் கோயிலில் மூலவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கொண்டரங்கி மல்லையசாமி கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நடராஜ பெருமான் சன்னதி ஆகிய கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பழனி: பழனியை அடுத்த கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெரியாவுடையாருக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து உள்பிரகாரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளினார். பழனி ஆர்எம்கே வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், நந்தி பகவானுக்கு வெள்ளிக் கொம்பு வைத்தும் பூஜை நடைபெற்றது.
பின்னர் உள்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாஷி அம்பாளுடன் எழுந்தருளினார். மேலும் பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், சன்னதி வீதியில் உள்ள வேலீஸ்வரர் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், சிதம்பரீஸ்வரர் கோயில், சித்தா நகர் சிவன் கோயில்களில் நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
உத்தமபாளையம்:தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பசும் பால் , இளநீர் , தும்பை பூ உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சங்கொலி முழங்க சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com