திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் மட்டும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. ஆனாலும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது.
பழனியில் ஒரு மணி நேரம் பலத்த சாரல் மழை:  பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த சாரல் மழை பெய்தது. பல இடங்களில் பயிர்கள், தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில், இந்த மழையால் விவசாயிகள் பயனடைந்தனர்.  
    பழனி காந்தி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் செல்லும் கழிவு நீர் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டதால், சாக்கடை நீர் சாலையில் தேங்கி நின்றது. இதனால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  கழிவு நீர் காரணமாக துர்நாற்றம் வீசியது. 
கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை:    கொடைக்கானலில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் நடைபெற்று வரும் நிலையில், மேகமூட்டங்களுடன் அவ்வப்போது சாரலும், மிதமான மழையும் பெய்து வருவதால், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந் நிலையில், கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பகல் நேரங்களில் வெயில் நிலவியது. மாலையில் கொடைக்கானல் செண்பகனூர், பிரகாசபுரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெருங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com