திண்டுக்கல்லில் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் மூலம் ரூ. 8.24 கோடி வர்த்தகம்

திண்டுக்கல்லில் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் மூலம் ரூ. 8.24 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக

திண்டுக்கல்லில் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் மூலம் ரூ. 8.24 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மதுரை வேளாண்மை உதவி இயக்குநர் (விளம்பரம் மற்றும் பிரசாரம்) இரா.சுரேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) சாத்தப்பன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை வேளாண்மை உதவி இயக்குநர் இரா.சுரேஷ் கலந்து கொண்டு பேசியது: 
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கிலும், இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளை மீட்கும் வகையிலும், மத்திய அரசு இ-நாம் (மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தைகள் திட்டம்) திட்டத்தினை கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து, நாடு முழுவதும் 585 இடங்களில் இ-நாம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 65 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வந்தாலும், முதல்கட்டமாக 23 இடங்களில் இ-நாம் சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. 
  அதில் ஒன்றான திண்டுக்கல் இ-நாம் சந்தையில் கடந்த ஓராண்டில் மட்டும் நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம், வெங்காயம், வாழை என 24,31,000 டன் உற்பத்திப் பொருள்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.8.24 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற பயனுள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம். அதன் மூலம் உற்பத்தி பொருள்களுக்கு நியாமான விலை கிடைப்பதை விவசாயிகளே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
 அப்போது குறுக்கீட்டு பேசிய வேளாண்மைத் துணை இயக்குநர் சாத்தப்பன், இந்த இ-நாம் திட்டம் நம்முடைய விவசாயிகளுக்கு சாத்தியமாகாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை முறையாக பயன்படுத்த தெரியாத விவசாயிகள், இ- நாம் திட்டம் குறித்து புரிந்து கொள்வதற்கு நீண்ட நாள்கள் தேவைப்படும் என்றார். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, வேளாண்மை அலுவலர்களும் அதிருப்தி அடைந்தனர்.
இதுதொடர்பாக வேளாண்மை அலுவலர் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டங்களுக்கு விவசாயிகளை அழைத்து வருவதே கடும் சவாலாக உள்ளது. இதுபோன்ற கூட்டத்தில் உயர் அலுவலர் ஒருவர் எதிர்மறையாக பேசினால், திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அடுத்தமுறை அழைத்தால் வருவதை விவசாயிகளும் தவிர்த்து விடுவர் என்றார். 
 கூட்டத்தில் திண்டுக்கல் வேளாண் விற்பனைக் குழு செயலர் மு.சந்திரசேகர், திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் செ.ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com