பழனி தைப்பூசத் திருவிழா: இன்று கொடியேற்றம்; ஜன. 21 இல் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 21 ஆம் தேதி தேரோட்டமும், ஜனவரி 24 ஆம் தேதி தெப்பத்தேர் உலாவும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா முக்கியத் திருவிழாவாகும். இத்திருவிழாவின் போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, மயில் பீலிக்காவடி, மலர்க்காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து, ஆடிப் பாடி பாதயாத்திரையாக வருகின்றனர். 
தைப்பூசத் திருவிழாவானது செவ்வாய்க்கிழமை பெரியநாயகியம்மன் கோயில் கொடிகட்டி மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், வெள்ளி காமதேனு, தந்த சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து, பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஜனவரி 20 ஆம் தேதி  வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவமும், பின்னர் இரவு 7.45 மணிக்கு வெள்ளித்தேர் உலாவும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத்  தேரோட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறுகிறது.  பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் நண்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி தேர் ஏற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 
இத்திருவிழாவை முன்னிட்டு, மலைக் கோயிலில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முடிய 5 நாள்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது. 
திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஜனவரி 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com