காசநோய் இல்லா கொடைக்கானல் 2025 திட்டம்: டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்குவதில் தாமதம்!

காசநோய் இல்லா கொடைக்கானல் 2025 திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் பெறுவதற்காக ரூ.30 லட்சம் செலுத்தி 5


காசநோய் இல்லா கொடைக்கானல் 2025 திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் பெறுவதற்காக ரூ.30 லட்சம் செலுத்தி 5 மாதங்களாகியும், இதுவரை கருவிகள் வழங்கப்படாததால் அடுத்தக்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. 
நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மற்றும் வட்டங்களை தேர்வு செய்து, 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத பகுதியாக அறிவிப்பதற்கான திட்டத்தினை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ஆகிய பகுதிகளை 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இடமாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொடைக்கானல் வட்டத்தில் கடந்த 2015 ஆய்வின்படி 142 ஆக இருந்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 2016இல் 138 ஆகவும், 2017இல் 103 ஆகவும் குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள கொடைக்கானல் வருவாய் வட்டத்தை, காசநோய் இல்லா பகுதியாக மாற்றும் பணிகள் ரூ.70 லட்சம் செலவில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கொடைக்கானல் மலைப் பகுதியிலுள்ள 15 ஊராட்சிகளுக்குள்பட்ட 145 குக்கிராமங்கள், தலா ஒரு நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அனைவரையும் பரிசோதித்து, காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. கொடைக்கானல் வட்டத்தில் 36,678 வீடுகளில் 1.35 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபரையும் ஆய்வு செய்வதற்கு 96 பணியாளர்கள் கொண்ட 48 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த குழுவினரின் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பில், மன்னவனூர், பூம்பாறை, பெருமாள்மலை துணை சுகாதார நிலையங்களைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
இதுவரை 4,900 வீடுகளில் 21,500 பேரிடம் இந்த குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் 160 பேருக்கு மட்டும் 2 வாரங்களுக்கு மேற்பட்ட சளி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், முதல் கட்ட ஆய்வில் 160 பேருக்கும் காசநோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள்: காசநோய் இல்லா கொடைக்கானல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு நடமாடும் எக்ஸ்ரே (வேன்) பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
அதேபோல், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வருவோரை பரிசோதிக்க டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகளை பெறுவதற்காக, திண்டுக்கல் மாவட்ட நலச் சங்கத்தின் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு மருந்து சேவைக் கழகத்துக்கு ரூ.30 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படாததால், அடுத்தக்கட்ட ஆய்வினை மேற்கொள்வதிலும், சளி பரிசோதனைக்கு மறுப்பவர்களை ஆய்வு செய்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கள ஆய்வில் ஈடுபடும் பணியாளர்கள் கூறியதாவது: சளி இருந்தாலும், அதனை சிலர் மறைத்துவிடுகின்றனர். 
டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் இருந்தால் காசநோயினை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய வசதியாக இருக்கும். அதற்கு ஏற்ப சிகிச்சையையும் உடனடியாக தொடங்க முடியும். அதேபோல் சளியில் குறைவான கிருமிகள் இருந்தால் எக்ஸ்ரே மூலமாக மட்டுமே கண்டறியலாம். 
இதுவரை சளி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 160 பேருக்கும், எக்ஸ்ரே கருவிகள் வந்தவுடன் மீண்டும் பரிசோதனை செய்து, அதன் முடிவுகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com