திண்டுக்கல்

59 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் அரசு கள்ளர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

DIN

ஒற்றை இலக்க மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் ஈராசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், திண்டுக்கல் அருகே 59 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியருடன் அரசு கள்ளர் பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  
திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டை அடுத்துள்ள சொட்டமாயனூர் கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, நல்லமனார்கோட்டை, புதூர், மூக்கையாகவுண்டனூர், காமனம்பட்டி, கவுண்டனூர், தோப்பூர், சொட்டமாயனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் நோக்கில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. 
கடந்த 30 ஆண்டுகளில் சொட்டமாயனூர் கிராமத்தைச் சுற்றி உள்ள நல்லமனார்கோட்டை, மாரம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் விரிவடைந்ததை அடுத்து, அந்தந்த பகுதியிலேயே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 
அதையடுத்து, சொட்டமாயனூர் அரசுப் பள்ளிக்கு பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வருகை குறையத் தொடங்கியது. இருப்பினும் கள்ளர் இன மக்கள் மட்டுமே வசித்து வரும் சொட்டமாயனூர் மற்றும் தோப்பூர் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், கள்ளர் தொடக்கப் பள்ளியிலேயே கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக் கல்வி நிர்வாகத்தின் கீழ் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கூட ஈராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 
ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த சொட்ட மாயனூர் அரசு கள்ளர் பள்ளியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இதனால், பல மாணவர்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு செல்வதும், சிலர் படிப்பை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது 59 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு, மற்றொரு கள்ளர் பள்ளியிலிருந்து வாரம் 2 நாள்கள் மாற்றுப் பணியில் ஒரு ஆசிரியர் சொட்டமாயனூர் பள்ளிக்கு வந்து செல்கிறார். 
இந்த மாற்றுப் பணி நியமனம், மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சொட்டமாயனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியது: ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூரை கொட்டகையில் செயல்படத் தொடங்கிய இப்பள்ளி, பல கட்ட முயற்சிகளுக்குப் பின் தற்போது 2 கான்கிரீட் கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் செயல்பாடு காரணமாக மாணவர்கள் பலர் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர்.  தற்போது 59 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி கூடுதல் ஆசிரியரை நியமிக்கவும், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இதுதொடர்பாக அரசு கள்ளர் பள்ளிகள் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது:
மாணவர் எண்ணிக்கை 50-க்கும் கூடுதலாக இருந்தால், கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க முடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் விண்ணப்பம் பெறப்படும். நிகழ் கல்வி ஆண்டு விரைவில் முடிவடையவுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டில் சொட்டமாயனூர் அரசு கள்ளர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT