திண்டுக்கல்

பொதுமக்களின் ஓட்டு பணத்துக்கு அல்ல, குடிநீருக்கு ஆழியாறு-வைகை இணைப்புத் திட்டத்தை முன்வைத்து 200 கிராமங்களில் களம் இறங்கிய விவசாயிகள்!

DIN

பொதுமக்களின் ஓட்டு பணத்துக்கு அல்ல, குடிநீருக்கு என்ற பிரசாரத்தை முன்வைத்து ஆழியாறு- வைகை இணைப்புத் திட்டத்துக்கு 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் களம் இறங்கியிருப்பது திண்டுக்கல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1.40 லட்சம் ஹெக்டேரில் வேளாண்மை பயிர்கள்,  30ஆயிரம் ஹெக்டேரில் தென்னை மரங்கள், 50ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 2.75 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களாக  உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தின்  தட்ப வெட்ப சூழல், மண் வளம் போன்றவற்றின் அடிப்படையில், நீராதாரம் சிறப்பாக இருந்தால் மானாவாரி நிலங்களிலும் இறவைப் பாசனத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.  
 ஆனால்,  ஆண்டுதோறும் குறைந்து வரும் மழையினால், இம்மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் பெரும்பாலான இடங்களில் 1000 அடிக்கும் கீழாக இறங்கிவிட்டது.  
ஆறு, கால்வாய் இல்லாத நிலையில், மழை மட்டுமே இம்மாவட்டத்திற்கான நீராதாரமாக இருந்து வருகிறது. நீராதார மேம்பாட்டிற்கான மாற்று வழியாக நதி நீர் இணைப்புத் திட்டம் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 
இந்நிலையில், திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலான 4 வழிச்சாலை அமைக்கும்போது, சாலையையொட்டி ஒரு கால்வாய் அமைத்து, ஆழியாறு, அமராவதி ஆறு மற்றும் சண்முகநதியிலிருந்து வெளியேறும் உபரிநீரை, திண்டுக்கல் மாவட்டத்தின் தேவைக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த சில மாதங்களாக விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். 
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மனுவினை சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் தபாலில் விவசாயிகள் அனுப்பியுள்ளனர். தபாலை பெற்றுக் கொண்ட எம்எல்ஏக்கள், பிரச்னை குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசாததால் அதிருப்தி அடைந்தனர். தற்போது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆழியாறு- வைகை இணைப்புத் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளனர். இத்திட்டத்தின் தேவை, அதனால் பெறக் கூடிய பயன்கள் குறித்து 5 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டுள்ள விவசாயிகள், திண்டுக்கல் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலும் 40 இடங்களில் பதாகைகளையும் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக கொடகனாறு குளங்கள், வாய்க்கால் பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அ.சவேரியார் மற்றும் செயலர் ரா.சுந்தரராஜ் ஆகியோர் கூறியது: ஒவ்வொரு ஆண்டும் ஆழியாறு, அமராவதி ஆற்றிலிருந்து வெளியேறும் மழை நீர் காவிரி ஆற்றில் கலந்து வீணாகிறது. 
அதேபோல், பழனி பகுதியிலுள்ள வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், சண்முக நதியில் கலக்கிறது. வீணாகும் நீரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் பயன்படுத்தும்  வகையில், ஆழியாறு- வைகை இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனை  வலியுறுத்தி விவசாயிகள் அனுப்பிய கோரிக்கை மனு குறித்து எந்த எம்எல்ஏவும் அழைத்துப் பேசவில்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளில் மட்டும் நதிகள் இணைப்பு வழக்கம்போல் தவறாமல் இடம் பெற்று விடுகிறது.  
 இந்த முறை ஆழியாறு- வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என  உறுதி அளிக்கும் வேட்பாளர்களுக்கே விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். 
பித்தளைப்பட்டி பிரிவு, அனுமந்தராயன்கோட்டை, தருமத்துப்பட்டி, கன்னிவாடி, மூலசத்திரம், நீலமலைக்கோட்டை பிரிவு, தம்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 40 இடங்களில் பொதுமக்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை வைத்துள்ளோம். மேலும் 5ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டும் விநியோகித்து வருகிறோம். 
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3ஆயிரம் குளங்கள், 1 லட்சம் பாசனக் கிணறுகள், 4 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் நிலையான நீர் வளம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT