திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். 
 திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் க.ஜோதிமுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி.வினயிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக மாவட்ட செயலர் வி.மருதராஜ், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி, தமாகா மாநகர் மாவட்டத் தலைவர் ரித்திஷ், தேமுதிக மாவட்ட செயலர் எஸ்ஆர்கே.பாலு ஆகியோர் உடனிருந்தனர். ஆண்டவன் பெயரால் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
திமுக வேட்பாளர் மனு தாக்கல்: திமுக வேட்பாளர் வேலுச்சாமி, திமுக மாநில துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலர் என்.செல்வராகவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் இரா.சச்சிதானந்தம் ஆகியோருடன் வந்து மனுத் தாக்கல் செய்தார்.
திமுக மாற்று வேட்பாளராக, வேலுச்சாமியின் மனைவி பரமேஸ்வரி மனுத்தாக்கல் செய்தார்.
மன்சூர் அலிகான் வேட்பு மனுத் தாக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 56 வயதாகும் மன்சூர் அலிகான், தனது கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு இடை நிற்றல் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 2 துணைவியர் மற்றும் 7 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளருக்கு சொத்து விவரம்: ஜோதிமுத்து தாக்கல் செய்த மனுவில், தனது பெயரில் ரூ.19.43 லட்சம் அசையும் சொத்து, ரூ.70 அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தனது மனைவி சிவகாமி பெயரில் ரூ.22.72 லட்சம் அசையும் சொத்து, ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும், மகன் கோகுலகண்ணன் பெயரில் ரூ.13.59 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் ரூ.41 .29 லட்சமும், மனைவி சிவகாமி பெயரில் ரூ.40 லட்சமும் கடன் இருப்பதாகவும், கையிருப்பில் ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் மீது 3 வழக்குகள் நிலுவையில்  இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜோதிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் வேலுச்சாமிசொத்து விவரம்: மனுவில், தனது  பெயரில் ரூ.3.69 கோடி மதிப்பிலான அசையும் சொத்து, ரூ.8.51 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.1 கோடி மதிப்பிலான அசையும் சொத்து, ரூ.97.62 லட்சம் மதிப்பிலான அசையா சொத்து, மகள், மகன் ஆகியோர் பெயரில் ரூ.57 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து மற்றும் ரூ.4.44 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 அதேபோல் வேலுச்சாமி பெயரில் ரூ.2.90 கோடியும், மனைவி பெயரில் 2.44 லட்சமும் கடன் இருப்பதாகவும், கையிருப்பு ரொக்கமாக ரூ.3 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வேலுச்சாமி மற்றும் குடும்பத்தினர் பெயரில் மொத்தம் ரூ.15.28 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 மன்சூர் அலிகான் சொத்து விவரம்:
சொத்து விவரங்களைப் பொருத்தவரை தனது பெயரில் ரூ.25.90 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது துணைவிகள் ஆபிதா பானு மற்றும் பேபி ஹமிதா பானு ஆகியோர் பெயரில் ரூ.48.77 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.2.87 கோடி செலவில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது பெயரில் ரூ.17.17 லட்சம் கடன் இருப்பதாகவும், தன் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5.61 கோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com