திரைப்பட ஆபாச சுவரொட்டிகளை கிழித்து மாதர் சங்கத்தினர் போராட்டம்

மதுரையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட ஆபாச சுவரொட்டிகளை கிழித்து திரையரங்கு முன்பாக அனைத்திந்திய

மதுரையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட ஆபாச சுவரொட்டிகளை கிழித்து திரையரங்கு முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் மதுரையில் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் சுவரொட்டிகள் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், இவற்றை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக செவ்வாய்க்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள திரையரங்கு முன்பாக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.கே.பொன்னுத்தாய்,  மாநகர் மாவட்டச் செயலர் சசிகலா, புறநகர் மாவட்டத் தலைவர் பிரேமலதா, செயலர் முத்துராணி, அரசரடி பகுதி குழுத் தலைவர் சுதாராணி, பொருளாளர் அங்கயற்கண்ணி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். 
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் திரையரங்கு முன்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்தும்,  திரையரங்கை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். 
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கரிமேடு போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுவரொட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர். 
இதையடுத்து அவற்றை திரையரங்கு ஊழியர்கள் அகற்றினர். இதைத் தொடர்ந்து மாதர் சங்கத்தினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். மேலும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.
போராட்டம் தொடர்பாக மாதர் சங்க மாநிலச் செயலர் எஸ்.கே.பொன்னுத்தாய் செய்தியாளர்களிடம் கூறியது:  இப்படத்தின் ஆபாச சுவரொட்டிகள் நகரில் பள்ளி, கல்லூரி அருகே ஒட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற ஆபாச சுவரொட்டிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது, படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com